India

ரயில் பெட்டியில் 28 நாகபாம்புகள்.. சாமர்த்தியமாக செயல்பட்ட பயணிகள்.. ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி !

உலகமெண்டும் விஷம் கொண்ட பாம்புகள் பூச்சிகளுக்கு அதிக தேவை இருக்கின்றது. மருத்துவத்துறையில் இதற்கான தேவை மிக அதிக அளவில் இருப்பதால் சில இடங்களில் சட்டவிரோத முறையில் பாம்புகள் கடத்தப்படுகிறது. கள்ள மார்க்கெட்டில் இதற்கு அதிக லாபம் கிடைப்பதால் சிலர் இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு கடத்தி வருகின்றனர்.

அந்த வகையில் பெண் ஒருவர் நாகலாந்தில் இருந்து அதிக விஷம் வாய்ந்த பாம்புகள் மற்றும் பூச்சிகளை தலைநகர் டெல்லிக்கு கடத்த முயன்றுள்ளார். இதற்காக நாகலாந்தில் இருந்து மேற்கு வங்கம் வந்த அவர் பின் அங்கிருந்து ரயிலில் டெல்லிக்கு சென்றுள்ளார்.

அவர் தன்னுடன் அந்த பாம்புகள், பூச்சிகள் கொண்ட பெட்டிகளையும் மறைந்து வைத்து எடுத்துச்சென்றுள்ளார். அப்போது அந்த பெட்டியில் இருந்து தொடர்ந்து விசித்திரமான சத்தம் தொடர்ந்து கேட்டுவந்ததால் சதேகம் அடைந்த சக பயணிகள் அந்த பெண் குறித்து போலிஸாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

அதன்படி ரயில் ஜார்க்கண்ட் மாநிலம் டாடாநகர் ரயில் நிலையத்துக்கு வந்தபோது அந்த பெண்ணை சுற்றிவளைத்த போலிஸார் அவர் கொண்டுவந்த பெட்டிகளை சோதனை நடத்தினர். அப்போது அதில், நாகப்பாம்புகள் போன்ற விஷப்பாம்புகள் மற்றும் அபூர்வவகை பூச்சிகள் இருந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த போலிஸார் அவற்றை பறிமுதல் செய்தனர். அந்த பெண்ணிடம் இருந்த பெட்டியில் 28 நாகப் பாம்புகளும், சில அபூர்வவகை பூச்சிகளும் இருந்ததாக போலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவ்ற்றை கடத்தி வந்த பெண்ணையும் கைது செய்த போலிஸார் அவரிடம் இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.

Also Read: "தப்பு செஞ்சுட்டனே.." - ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொன்ற விவகாரம்.. கோப்பைகளை பார்த்து கதறி அழுத காதலி !