India

“பள்ளியில் நாடக ஒத்திகை.. தூக்குக் கயிற்றில் தொங்கிய 7ம் வகுப்பு மாணவன் பரிதாப பலி”: கர்நாடகாவில் சோகம்!

கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டத்தில் தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் மாணவன் சஞ்சய் கௌடா. நவம்பர் 1ஆம் தேதி கன்னட மாநிலம் உதயமான தினத்தை" கன்னட ராஜ்ய உற்சவ" நாளாக கடைபிடிக்கப்பட்டு வருவது வழக்கம். வழக்கமாக பெரும்பாலான பள்ளிகளில் சுதந்திர தினம், குடியரசு தினம் மற்றும் இது போன்ற மாநில உதய தினம் போன்ற விழா கொண்டாட்டங்களில் மாணவர்கள் வரலாற்று நாடகங்கள் நடித்துக் காட்டுவது வழக்கம். அதற்கான ஒத்திகையிலும் ஈடுபட்டு வருவது வழக்கம்.

அந்த வகையில் சித்ரதுர்கா மாவட்டம் தனியார் பள்ளியில் கடந்த ஒரு வார காலமாக பள்ளியில் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள கன்னட உதய தின கொண்டாட்டத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் குறித்த நாடகத்தில், பகத்சிங்காக வேடமிட்டு நடிப்பதற்காக ஒத்திகையில் ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவன் சஞ்சய் கௌடா ஈடுபட்டு வந்தான்.

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று இவர்களது வீட்டில் பெற்றோர் வெளியே சென்று இருந்த பொழுது பகத்சிங் குறித்த நாடக ஒத்திகையில் ஈடுபட்டிருந்த பொழுது, குறிப்பாக பகத்சிங் தூக்கிலிடப்படும் காட்சியை ஒத்திகை செய்த பொழுது எதிர்பாராத விதமாக தூக்குக் கயிற்றில் தொங்கியவாறு மாணவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதை அறிந்த அவர்களது பெற்றோர் பதறி அடித்து மாணவனின் உடலை மீட்டு கதறி அழுத நிலையில், இது குறித்த தகவல் போலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போலிஸார் மேற்கொண்ட விசாரணையில் மாணவன் தவறுதலாக எதிர்பாராத விதமாக இது போன்ற ஒத்திகையில் ஈடுபடும் பொழுது உயிரிழந்திருப்பது தெரிய வந்தது.

மேலும் இது குறித்து பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் படி நாடக ஒத்திகையில் தூக்கிலிடம் சம்பவம் குறித்த ஒத்திகை எப்பொழுதும் மேற்கொள்ளப்படவில்லை. இருப்பினும் மாணவன் தத்ரூபமாக இருக்க வேண்டி கட்டுரையில் உள்ளது போல இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்தது.

இது மிகுந்த வருத்தம் அளிக்கக் கூடிய ஒன்று. எனவே இனி நாடகங்களில் இது போன்ற காட்சிகள் இடம் பெறாது வண்ணம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் பகத்சிங் வரலாறு குறித்த நாடக ஒத்திகையில் பள்ளி மாணவன் எதிர்பாராத தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “இது ஆணாதிக்க மனோ நிலை.. பெண்களுக்கு இரு விரல் சோதனை கூடாது” : வன்கொடுமை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!