India

“15 வயது பெண்ணின் திருமணம், குழந்தை திருமணம் ஆகாது..” : அரியானா நீதிமன்றத்தின் தீர்ப்பால் பரபரப்பு!

15 வயதுக்கு மேற்பட்ட இஸ்லாமிய மதத்தை சேர்ந்த குழந்தைகளின் திருமணம் குழந்தை திருமணம் என்று கூற முடியாது என பஞ்சாப் - அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜாவித் (வயது 26). இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து சிறுமியை திருமணம் செய்த விவகாரத்தில் குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் ஜாவித் கைது செய்யப்பட்டதோடு, சிறுமியும் சிறார் காப்பகத்தில் அடைக்கப்பட்டார்.

இதையடுத்து குழந்தை திருமண தடைச் சட்டத்தின் கீழ் தன் மீது போடப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரியும் ஜாவித் வழக்கு தொடுத்தார். மேலும் தனது மனைவியை (15 வயது சிறுமி) தன்னிடம் ஒப்படைக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இந்த வழக்கு பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது இதனை விசாரித்த நீதிபதி விகாஸ் பால் என்பவர், இஸ்லாமிய சட்டத்தின் படி ஒரு பெண் வயதுக்கு வந்த 15 வயது பூர்த்தி அடைந்தாலே, திருமணம் செய்து கொள்ளலாம் என தெரிவித்தார்.

மேலும் அந்த பெண், தனது பெற்றோரின் சம்மதம் இல்லாமல் கூட திருமணம் செய்துகொள்ளலாம் என்றும், ஆனால் இந்த வழக்கு பெற்றோர் சம்மதத்துடன் நடந்ததால் இந்த வழக்கு செல்லாது என்றும் தெரிவித்தார். எனவே ஜாவித் மீதான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் சிறுமியை அவரது கணவரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டார். பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியின் இந்த உத்தரவு தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், குழந்தைகள் திருமணம் சட்டம் என்பது குழந்தைகளுக்கு விவரம் தெரியும் முன்பே திருமணம், குடும்பம், குழந்தை என்று பெரிய சுமையை கொடுக்கக்கூடாது என்பதற்காக குழந்தை திருமணம் தடை சட்டம் 2006-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது.

இந்த சட்டம் இயற்றிப்பட்ட நாள் முதல் தற்போது வரை இந்தியாவில் இருக்கும் அனைத்து மாநில மக்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்படியாக உள்ளது. அதன்பேரில் 18 வயதுக்கு கீழ் உள்ள பெண்களும், 20 வயதுக்கு கீழ் உள்ள ஆண்களும் திருமணம் செய்துகொண்டால் அது குழந்தைகள் திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் வரும்.

ஆனால் தற்போது இஸ்லாமிய தனிநபர் சட்டங்களில் அடிப்படையில் 15 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்வது, குழந்தைகள் திருமணம் அல்ல என்று பஞ்சாப் - அரியானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: உலக சிக்கன நாள் : தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள் என்ன ?