India
கண்ணாடி பாட்டிலில் பட்டாசு வெடித்த சிறுவன்.. தட்டிக்கேட்ட இளைஞருக்கு நேர்ந்த கதி.. மும்பையில் கொடூரம் !
கண்ணாடி பாட்டிலுக்குள் வைத்து பட்டாசு வெடித்த சிறுவனை தட்டிக்கேட்ட இளைஞரை 3 சிறுவர்கள் சேர்ந்து கொலை செய்துள்ள சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொண்டாடப்படும் தீபஒளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் அனைவரும் பட்டாசு வெடித்து மகிழ்ந்தனர். ஆண்டுதோறும் வெவ்வேறு நாளில் நடைபெறும் இந்த பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 25-ம் தேதி கொண்டாடப்பட்டது.
பெரும்பாலான மக்கள் காலையில் எழுந்து பூஜை செய்து புத்தாடை அணிந்து தீபஒளியை கொண்டாடினர். சிறுவர் முதல் பெரியவர் வரை பட்டாசு வெடித்தும் மகிழ்ந்தனர். அந்த வகையில் மும்பையில் சிறுவன் ஒருவரின் கண்ணாடி பாட்டிலுக்குள் வைத்து பட்டாசு வெடித்ததை இளைஞர் ஒருவர் தட்டிக்கேட்டபோது 3 சிறுவர்கள் சேர்ந்து அவரை கொலை செய்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் கிழக்கு மும்பையில் கோவண்டி என்ற பகுதி உள்ளது. இங்கு சிவாஜி நகரில் 12 வயது சிறுவன் ஒருவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெடி வெடித்து கொண்டிருந்தான். அப்போது ஒரு கண்ணாடி பாட்டிலில் பட்டாசை வைத்து அந்த பாட்டிலையும் வெடிக்க வைக்க எண்ணியுள்ளார்.
இதனை கண்ட அந்த பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் அந்த சிறுவனிடம் இப்படி செய்யக்கூடாது என்று கூறியுள்ளார். அப்போது அந்த சிறுவனின் நண்பர்களும் உடனிருந்துள்ளனர். இதனால் அந்த இளைஞருக்கு, சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த வாக்குவாதம் சிறிது நேரத்திலேயே கைகலப்பாக மாறியுள்ளது.
இதில் ஆத்திரமடைந்த அந்த சிறுவர்கள் தனது கையில் இருந்த ஒரு கூர்மையான ஆயுதத்தை கொண்டு அந்த இளைஞரின் கழுத்தில் குத்தியுள்ளார். இதையடுத்து அந்த சிறுவர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இளைஞரை அருகிலிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அந்த இளைஞர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து இது குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட சிறுவர்களில் 2 பேரை காவல்துறையினர் விரட்டி பிடித்து கைது செய்தனர்.
மேலும் தலைமறைவாகியுள்ள மற்றோரு குற்றவாளியை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : வயநாட்டில் 27,000 வாக்குகளில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?