India

“பில்கிஸ் பானு வீட்டுக்கு முன்பு பட்டாசுக் கடை போட்ட குற்றவாளி” : வேடிக்கை பார்க்கும் குஜராத் போலிஸ் !

கடந்த 2002ம் ஆண்டு குஜராத்தில் நடைபெற்ற மிகப்பெரிய மதக்கலவரத்தின்போது பில்கிஸ் பானோ என்ற பெண்மணியின் மொத்த குடும்பமும் அகமதாபாத் அருகே உள்ள ரந்திக்பூர் என்ற கிராமத்தில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானது. அப்போது பில்கிஸ் பானு, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். அவரை, மதவெறியர்கள் ஈவு இரக்கமின்றி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தனர்.

அவரது குடும்பத்தைச் சேர்ந்த பலரும், இந்த கலவரத்தின்போது கொல்லப்பட்டனர். பில்கிஸ் பானு படுகாயங்களுடன் உயிர்தப்பினார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், கடந்த 2008ம் ஆண்டு ஜனவரி 21ம் தேதி வழங்கிய தீர்ப்பில், பலாத்காரம் மற்றும் கொலை வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்தது.

இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு அண்மையில் விடுதலை செய்ததது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சமீபத்தில் கூட குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையில், குஜராத் அரசு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் பில்கிஸ் பானு வழக்கில் கைதான 11 பேரை முன்கூட்டியே விடுதலை செய்ய மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது தெரியவந்தது. இந்நிலையில், அன்மையில் விடுவிக்கப்பட்ட குற்றவாளிகளில் ஒருவரான ராதே ஷ்யாம் ஷா என்பவர் பில்கிஸ் பானுவின் வீட்டு முன்பாக பட்டாசு கடை போட்டுள்ளார்.

ஏற்கனவே இவர் மீது பெண் ஒருவரை தாக்கிய வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், பிரச்சனை ஏற்படுத்துவதற்காக பில்கிஸ் பானுவின் வீட்டின் முன்பு பட்டாசுகடை போட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்திருக்கிறார்கள். மேலும் அதேபகுதியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் உடந்தையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பரோலில் வெளிவந்த குற்றவாளிகள் 11 பேரும் எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் வெளியில் சுற்றித்திரிவதாகவும், அவர்கள் மூலம் அடுத்தடுத்து வன்முறை கலவரங்கள் நடக்க வாய்ப்பு உள்ளதாகவும் எனவே அவர்களின் விடுதலையை ரத்து செய்யவேண்டும் என அப்பகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: பில்கிஸ் பானு வழக்கு.. பரோலில் வந்தபோது பெண்ணிடம் தவறாக நடந்த குற்றவாளி.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !