India

'இன்னும் வேகமா போ'- 230 கி.மீ வேகத்தில் லாரி மீது மோதிய BMW கார்.. FACEBOOK LIVE செய்தபோது நேர்ந்த சோகம்!

நவீன உலகில் அனைத்தும் நவீனமயமாக்கப்பட்டதால், பலரும் தங்களது விருப்பங்களை நவீனமாகவே பயன்படுத்தி வருகின்றனர். அனைவரது பயன்பாட்டுக்கு உதவும் சமூக வலைதளம் தற்போது அதை பலரும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

சிலர் தங்களை ஹீரோ என நினைத்து பல ஆபத்தான செய்கைகளை செய்கின்றனர். குறிப்பாக சாகசம் செய்வதாக எண்ணி, உயரத்தில் நின்று கொண்டு லைவ் செய்வது, ஓடும் இரயில் அருகே நின்று ரீல்ஸ் செய்வது, இருசக்கர வாகனத்தில் வீலிங் செய்வது போன்றவை செய்கின்றனர். இது போன்ற ஆபத்தான செயலால் பலரும் தங்களது உயிரை விடுகின்றனர்.

அதிலும் தற்போது தங்கள் சாகசங்களை நேரடி ஒளிபரப்பு செய்கின்றனர். அதன்படி வட இந்தியாவை சேர்ந்த யூடியூப் பிரபலமான சிறுமி ஒருவர், தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அந்த சிறுமியை அவரது தாயார் தேடும் வீடியோ பல மணி நேரங்களாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அது போன்று ஒரு சாகச நிகழ்ச்சியால் தற்போது 4 இளைஞர்கள் தங்கள் உயிரை விட்டுள்ளனர். மேலும் அது முழுவதும் முகநூல் பக்கத்தில் லைவாக ஓடிக்கொண்டிருந்தது.

உத்தர பிரதேச மாநிலத்தில் பூர்வாஞ்சல் எக்ஸ்பிரஸ் சாலையில் BMW காரில் இளைஞர்கள் சிலர் சென்று கொண்டிருந்தனர். அதில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் என்பவர், தனது நண்பர்களுடன் சாலையில் வேகமாக காரில் செல்வதை முகநூல் பக்கத்தில் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருந்தார். அப்போது அந்த காரில் வேகம் சுமார் 230 கி.மீ வேகத்தில் ஓடி கொண்டிருந்தது.

பின்னர் நேரடி ஒளிபரப்பு செய்துகொண்டிருக்கும்போதே, 'இன்னும் வேகமா போ' என்றும் சக நண்பர்கள் சொல்லிக்கொண்டே இருந்தனர். இதனால் காரை ஓட்டிய இளைஞரும் வேகமாக காரை ஓட்டி சென்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த ஒரு கண்டெய்னர் லாரியும், இந்த காரும் நேருக்கு நேர் மோதியது.

இதில் காரில் இருந்த அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதிவேகமாக வந்த கார், கண்டெய்னர் லாரி மீது மோதியதில் காரில் இருந்த இளைஞர் ஒருவரின் கை மற்றும் தலை தூரமாக தூக்கி எறியப்பட்டது. மேலும் வேகமாக மோதியதில் காரின் இன்ஜினும் தூரத்தில் விழுந்தது. இந்த கோர விபத்தில் மொத்தம் 4 இளைஞர்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த கோர சம்பவம் நடந்த பிறகும் முகநூல் லைவ் ஓடிக்கொண்டு தான் இருந்தது. இதையடுத்து காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பினர். விபத்தில் சிக்கிய இளைஞர்களின் அனைவரின் உடலும் ஆங்காங்கே தூக்கி வீசப்பட்டிருந்தது. இது குறித்து காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவ வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாகசம் செய்வதாக எண்ணி இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களுக்கு இந்த கோர சம்பவம் ஒரு முன்னுதாரணமாகவும் இருக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: #Exclusive ‘உங்களில் ஒருவன்’ வாசகர்கள் கேள்விக்கு பதிலளித்த முதல்வர் - நேரடி கேள்வி பதில் தொகுப்பு இங்கே!