India

19 வயது இளம் பெண் கடத்தி கொலை.. உத்தரகாண்ட் பா.ஜ.க மாநில தலைவரின் மகன் உட்பட 3 பேர் கைது!

உத்தரகண்ட் மாநிலம், பௌரி மாவட்டத்திற்குட்பட்ட ரிசார்ட் ஒன்றில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றிவந்தார். இவர் திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமாகியுள்ளார். இதையடுத்து தனது மகள் காணவில்லை என பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் போலிஸார் இந்த வழக்கில் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர்.

பின்னர் மாயமான அங்கிதா பண்டாரியின் பெற்றோர் சமூகவலைதளத்தில் உருக்கமானா வீடியோ ஒன்றை வெளியிட்டனர். இந்த வீடியோ உத்தரகாண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து போலிஸார் வழக்கில் தீவிரமாக விசாரணை செய்தனர். பின்னர் அங்கிதா பண்டாரி வேலை செய்துவந்த ரிசார்டின் சி.சி.டி.வி காட்சிகளை போலிஸார் ஆய்வு செய்தனர். அப்போது ரிசார்டின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அங்கிதா பண்டாரி மேலும் இரண்டு பேர் வெளியே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

ஆனால் திரும்பி வரும்போது அங்கிதா பண்டாரி மட்டும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலிஸார் ரிசார்ட் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியபோது பகீர் தகவல் வெளிவந்தது. புல்கித் ஆர்யா, ரிசாரிட்டிற்கு வரும் விருந்தினர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட அங்கிதா பண்டாரியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் புல்கித் ஆர்யா, அங்கிதா பண்டாரி உள்ளிட்ட 4 பேர் வெளியே சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அங்கிதா பண்டாரியை கொலை செய்து கால்வாயில் அவரது உடலை வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கிதா பண்டாரியின் உடலை போலிஸார் தேடிவருகின்றனர். ஆனால் இதுவரை அவரது உடல் கிடைக்கவில்லை. பின்னர் புல்கித் ஆர்யா உள்ளிட்ட 4 பேரை போலிஸார் கைது செய்தனர். ரிசார்ட் உரிமையாளர் புல்கித் ஆர்யா உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க தலைவர் வினோத் ஆர்யாவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

உத்தரகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருவதால், அம்மாநில தலைவரின் மகனே இளம் பெண் கொலை வழக்கில் கைதாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: என்னோட இறப்பு சான்றிதழைத் தொலைத்துவிட்டேன்: பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்துத் தேடும் வித்தியாசமான நபர்!