India

LOAN APP விவகாரம் : மீண்டும் ஒரு கல்லூரி மாணவன் தற்கொலை.. கதறும் பெற்றோர் - ஆந்திராவில் பரபரப்பு !

ஆந்திர மாநிலம் பல்நாடு பகுதியை அடுத்துள்ள தாட்சேபள்ளி என்ற இடத்தை சேர்ந்தவர் கிருஷ்ணா. ஐதராபாத்தில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு வெங்கட் சிவா என்ற ஒரு மகன் உள்ளார். வெங்கட் சிவா அங்குள்ள கல்லூரி ஒன்றில் இன்டர்மீடியட் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெங்கட் சிவாவிற்கு அவசரமாக பணம் தேவை பட்டது. இதனால் தனது தந்தையிடம் கேட்காமல், லோன் ஆப் மூலம் 4000 ரூபாய் கடன் பெற்றிருந்தார். வெங்கட்டும் கல்லூரி முடிந்து பகுதி நேர வேலைக்கு சென்று வந்தார்.

அதன்மூலம் கிடைத்த ரூ.16,000 பணத்தை முதலில் செலுத்தியுள்ளார். ஆனால் மீண்டும் அவரிடம் ரூ.20,000 செலுத்த வேண்டும் என லோன் ஆப் கும்பல் மிரட்டியுள்ளனர். இதனால் வேறு வழியின்றி தனது தன்தாயிடம் இது குறித்து கூறி அழுதுள்ளார்.

தந்தையும் கவலை பட வேண்டாம் என்றும் பணத்தை தயார் செய்வதாகவும் கூறி ஆறுதல் படுத்தியுள்ளார்.இருப்பினும் பணம் செலுத்தாத வெங்கட்டை குறித்து அவர் ஒரு மோசடிகாரார் என்றும், அவர் பணத்தை ஏமாற்றுபவர் என்றும் அவரது நண்பர்களுக்கு மெசேஜ் அனுப்பியுள்ளனர் அந்த கும்பல். இதனால் மிகவும் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று கல்லூரி முடிந்து வீடு திரும்பிய வெங்கட் அவரது அறைக்கு சென்றுள்ளார். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை என்பதால் சந்தேகமடைந்த அவரது தாய் கதவை தட்டியுள்ளார். பிறகு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக இதே லோன் ஆப் விவகாரம் தொடர்பாக ஒரு தம்பதி தற்கொலை செய்து கொண்ட நிலையில், தற்போது கல்லூரி மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ’மதுரைக்காரங்கன்னா சும்மாவா..’ : கணவனை விளையாட அனுப்ப பத்திரம் எழுதி கொடுத்த மணப்பெண்!