India

பெண்ணிடம் அநாகரீகமாக நடந்த பா.ஜ.க MLA.. 'பாலியல் வன்கொடுமையா செய்தேன் ?' என கேட்டதால் அதிர்ச்சி !

கர்நாடக மாநில முன்னாள் அமைச்சராகவும் தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமாக இருப்பவர் லிம்பவல்லி. பாஜகவை சேர்ந்த அவர் தனது தொகுதியில், பிரஹுத் பெங்களூரு மகாநகர பலிகே (BBMP) என்ற அரசு அமைப்பு நடத்தும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார்.

அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் தனது வீடு மழைநீர் வடிகால் பகுதியை ஆக்கிரமிப்பு செய்யவில்லை என்று கூறியதோடு அதற்கான ஆவணத்தையும் எம்.எல்.ஏவிடம் காட்டியுள்ளார். அப்போது அந்த பெண்ணை நோக்கி திருப்பிய எம்.எல்.ஏ அந்த பெண்ணின் கையில் இருந்து ஆவணத்தைப் பறிக்க முயன்றுள்ளார்.

அதனை அந்த பெண் எதிர்த்த நிலையில், அவரை ஒருமையில் பேசிய எம்.எல்.ஏ உனக்கு சுயமரியாதை ஏதும் இல்லையா எனவும் அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு ஒரு பெண்ணிடம் இப்படி நடக்கக்கூடாது என்று கூறிய அந்த பெண், குறிப்பிட்ட இடத்தில் சுவர் கட்ட தனக்கு உரிமை, அனுமதி இருக்கிறது என்றும் ஆனாலும், தனது வீட்டை ஒட்டிய சுவரை அதிகாரிகள் இடித்துவிட்டனர் என்றும் அந்தப் பெண் கூறியுள்ளார்.

பெண்ணின் இந்த பதிலால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ அருகில் இருந்த போலிஸாரிடம் திமிராக பேசும் இந்த பெண்ணை கைது செய்யுங்கள் என்று கூறினார். இந்த நிலையில், இது தொடர்பாக வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதுகுறித்து உள்ளூர் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய அவர் , "நான் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தேனா, என்னைப் பார்த்து இந்தக் கேள்வியைக் கேட்கிறீர்கள்?" என்று அவர் தனது செயலை நியாயப்படுத்தியது கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.

Also Read: ஜார்கண்ட் : பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பழங்குடியின சிறுமி.. தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்த அவலம் !