India

K. V பள்ளிகளில் 12,044 ஆசிரியர் பற்றாக்குறை, 40% பள்ளிகளில் H.M இல்லை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 49 கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் உள்ளன. இவை, ஒன்றிய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. அதேபோல நாடு முழுவதும் 1,199 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை ஒன்றிய அரசு இயக்கி வருகிறது.

இந்த நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக மாறியுள்ளது. இது தொடர்பாக வெளியான ஒன்றிய அரசின் அறிக்கையில் ஒட்டுமொத்தமாக கேந்திரிய வித்யாலயாக்களில் 12,044 பணியிடங்கள் காலியாக உள்ளது எனவும், இந்தியாவிலேயே அதிகபட்சமாக தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில்தான் அதிகளவில் ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 1162 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும் அடுத்த இடத்தில் 1066 காலிப் பணியிடங்களுடன் மத்தியப் பிரதேசம் இரண்டாவது இடத்தில் உள்ளது எனவும் ஒன்றிய அரசின் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. அதிலும் இந்த பள்ளிகளில் சுமார் 40 % தலைமையாசிரியர் இல்லாத அவலமும் வெளிவந்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டுக்கு பின்னர் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கு ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் பணி நடைபெறவில்லை. தற்போதைய சூழலில் இந்த கல்வியாண்டுக்குள் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள் தொடங்கும் என்று ஒன்றிய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இன்ஸ்டா மூலம் அறிமுகம்.. கணவருக்கு தெரியாமல் வளர்ந்த நட்பு.. இறுதியில் ரூ.1.63 கோடியை இழந்த அரசு ஊழியர்!