India

"சாவர்க்கர் பறவைமேல் பறந்ததை புரிந்துகொள்ள அறிவு வேண்டும்"-வடிவேலு பாணியில் விளக்கமளித்த கர்நாடக அரசு !

பா.ஜ.க-வினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களுக்குப் பெயர்போனவர். விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேய அரசை எதிர்க்காமல் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர்தான் சாவர்க்கர் என பலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.

இப்படி ஆங்கிலேயர்களிடம் அடிபணிந்து சென்ற சாவர்க்கரைதான் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எப்படியாவது அவரின் வரலாற்றை மாற்றி விடுதலை போராட்டத்திற்காக அரும்பாடுபட்டவர் என சித்தரிக்க முயன்று வருகிறது.

அண்மையில் 75ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக அரசால் வெளியிடப்பட்ட சுதந்திர தின சிறப்பு மலரில் கூட சாவர்க்கர் படம் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. முன்னாள் முதல்வர் சித்தராமையா இதற்கும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தார்.

இந்நிலையில், கர்நாடக மாநிலத்தில் 8ம் வகுப்பு கன்னட மொழிப் பாடத்தில் சாவர்க்கர் சிறையில் இருந்தபோது புல் புல் பறவை மீது அமர்ந்து தாய்மண்ணுக்கு வந்து சென்றார் என இடம் பெற்றுள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படவைத்துள்ளது.

அதில், "அந்தமான் சிறையில் சாவர்க்கர் இருந்தபோது சிறை அறையில் சிறிய துளை கூட கிடையாது. ஆனால் அவரது அறைக்கு எப்படியோ ஒரு புல் புல் பறவை வந்து விடும். அந்த பறவையின் சிறகின் மீது அமர்ந்து தினமும் தாய் மண்ணிற்கு சாவர்க்கர் வந்து செல்வார்" என இடம் பெற்றுள்ளது.

இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பலரும் அந்த பாடபகுதியை நீக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்த சர்ச்சைக்கு புத்தக வடிவமைப்பு குழுவின் தலைவர்‌ ரோஹித் சக்ரதீர்த்தா விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "இந்த பத்தியில் உள்ள வரிகள் அழகிய புலமை நயமிக்கவை ஆகும். ஆனால் இந்த புலமை நயத்தை சிலரால் புரிந்து கொண்டு ரசிக்க தகுந்த அளவில் அறிவாற்றல் இல்லையே என்பது அதிசயமாக உள்ளது." கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் கூறியதை வைத்து பலரும் இணையத்தில் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: மதுரை மாணவனுக்கு லட்ச தீவில் தேர்வு மையம்.. -தேர்வெழுத கடல் தாண்டி பயணிக்க வேண்டுமா என மதுரை MP கேள்வி !