India

ரூ.250 பள்ளி கட்டணம் செலுத்தாத மாணவன்.. அடித்தே கொன்ற ஆசிரியர்.. கதறும் சகோதரன் : உ.பி.-யில் அதிர்ச்சி !

உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைச் பகுதியை அடுத்துள்ள சிர்சியா என்ற இடத்தில் பண்டிட் பிரம்மதட் மேல்நிலைப்பள்ளி' ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பல மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில், இங்கு ஆசிரியராக அனுபம் பதக் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி 9- வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவரை கடுமையாக தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த மாணவன், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கடந்த 17-ம் தேதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அறிந்த மாணவனின் உறவினர்கள், காவல்துறையில் புகார் கொடுத்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த அதிகாரிகள் ஆசிரியரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறுகையில், "ஆசிரியர் அனுபம் பதக் தாக்கியதில் மாணவர் உயிரிழந்துவிட்டதாக அவரது மாமா புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் ஆசிரியர் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது." என்றார்.

மேலும் உயிரிழந்த மாணவனின் சகோதரன் கூறுகையில், "பள்ளிக்கட்டணத்தை மாதம் ரூ.250 பணத்தை நாங்கள் ஆன்லைனில் செலுத்தி வருகிறோம். ஆனால் இது தெரியாத ஆசிரியர் என் தம்பியை அடித்தே கொன்றுள்ளார். எனது தம்பியின் கை எலும்பு முறிந்து, இரத்த கசிவு ஏற்பட்டும் காணப்பட்டது. என் தம்பியை கொன்றவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து மாணவரின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பிறகு காவல்துறை அளித்த வாக்குறுதியின் பேரில் அவர்கள் களைந்து சென்றனர். மேலும் கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக ராஜஸ்தானில், மாற்று சமூகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் தண்ணீர் பானையை தொட்டத்திற்கு ஆசிரியர் அடித்து கொன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது வெறும் ரூ.250 பணத்திற்காக மாணவன் ஆசிரியரால் அடித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.