India
பில்கிஸ் பானு வழக்கு : குற்றவாளிகளை விடுவிக்கும் குழுவில் பாஜக MLA-க்கள் ! -வெளிவந்த தகவலால் அதிர்ச்சி !
2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரின் குடும்பத்தினரையும் ஒரு இந்துத்துவ கும்பல் தாக்கியது.
அப்போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் இருந்த இரண்டரை வயதுக் குழந்தையைப் பாறையில் மோதி அடித்துக் கொலை செய்து தப்பி ஓடியது. இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
இதைத் தொடந்து இந்த சம்பவத்தில் 11 பேரைக் போலிஸார் கைது செய்தனர். நீண்ட நாள் நடந்த இந்த வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலிஸார் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுவித்தது.
7 பேர் விடுதலையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் 7 பேரையும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட 11 பெரும் தண்டனையைக் குறைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த வழக்கில் தண்டனை குறைப்பு குறித்து மாநில அரசு முடிவெடுக்கலாம் என உச்சநீதிமன்றம் கூறியது.
அதைத் தொடர்ந்து பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்ட 11 பேருக்கும் பொது மன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு விடுதலை செய்துள்ளது. பா.ஜ.க அரசின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் உட்பட பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 11 பேரும் நல்லவர்கள். அதனால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய குஜராத் பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் சி.கே.ராவுல் ஜி, " அவர்கள் பிராமணர்கள். பொதுவாகவே நல்ல பழக்க வழக்கம் கொண்டவர்கள். சிறையிலும் அவர்களது நடத்தை நன்றாகவே இருந்துள்ளது. அதனால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார். இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனத்தை தெரிவித்தனர்.
இந்த நிலையில், இவர்களின் விடுதலை குறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், "குஜராத்தில் கூட்டு பலாத்கார வழக்கில் தண்டனை பெற்ற 11 பேருக்கு விடுதலை வழங்கியதில் ஒரு சுவாரஸ்யமான பக்க கதை உள்ளது.
மறுஆய்வுக் குழுவில் ஸ்ரீ சி.கே. ராவோல்ஜி மற்றும் ஸ்ரீ சுமன் சவுகான் ஆகிய இரண்டு பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். மற்றொரு உறுப்பினர், கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் அரசு தரப்பில் முக்கிய சாட்சியாக இருந்த ஸ்ரீ முரளி முல்சந்தனி. இது குற்றவியல் மற்றும் குற்றவியல் நிபுணர்களின் நடுநிலையான, பாரபட்சமற்ற குழுவாக இருந்ததா? " என கேள்வியெழுப்பியுள்ளார். இவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!