India
"இந்த கொடூரர்களை குஜராத் அரசு எப்படி விடுவித்தது, என்னை தனியாக விடுங்கள் ?" -விரக்தியில் பில்கிஸ் பானு !
கடந்த 2002-ம் ஆண்டில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இதில் ஏராளமானோர் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தின்போது அகமதாபாத்தில் உள்ள ரன்திக்பூரைச் சேர்ந்த பில்கிஸ் பானு என்பவரையும் அவரின் குடும்பத்தினரையும் ஒரு இந்துத்துவ கும்பல் தாக்கியது.
அப்போது 5 மாதக் கர்ப்பிணியாக இருந்த பில்கிஸ் பானுவை அந்தக் கும்பல் கூட்டுப் பலாத்காரம் செய்து, அவரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை கொலை செய்தது. அதுமட்டுமல்லாமல் பில்கிஸ் பானுவின் கையில் இருந்த இரண்டரை வயதுக் குழந்தையை பாறையில் மோதி அடித்துக் கொலை செய்து தப்பி ஓடியது. இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கியது.
இதைத் தொடந்து இந்த சம்பவத்தில் 11 பேரைக் போலிஸார் கைது செய்தனர். நீண்ட நாள் நடந்த இந்த வழக்கில் கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட போலிஸார் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுவித்தது.
7 பேர் விடுதலையை எதிர்த்து குஜராத் உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீடு வழக்கில் 7 பேரையும் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு முன்னர் பில்கிஸ் பானு வழக்கில் குற்றம் நிருபிக்கப்பட்ட 11 பேருக்கும் பொதுமன்னிப்பு வழங்கி குஜராத் பா.ஜ.க அரசு உத்தரவிட்டது. விடுதலை செய்யப்பட்டவர்கள் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். இந்த சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாஜக அரசின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இது குறித்து பில்கிஸ் பானு கூறியபோது, "எனது குடும்பத்தையும் என் வாழ்க்கையையும் சீரழித்து, என் மூன்று வயது மகளை என்னிடமிருந்து பறித்த 11 குற்றவாளிகள் சுதந்திரமாக உள்ளதை கேள்விப்பட்டபோது, கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட அதிர்ச்சி என்னை மீண்டும் உலுக்கியது. நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை; என்னை தனியாக வாழ விடுங்கள், ” என்று குரல் உடைந்த நிலையில் கூறினார்.
மேலும் இது குறித்து அவரது கணவர் யாகூப் ரசூல் கூறுகையில் “இதுபோன்ற ஒரு கொடூரமான குற்றத்தின் குற்றவாளிகளை அரசாங்கம் விடுவித்துள்ளது என்பதை எங்களால் நம்ப முடியவில்லை. எனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொடூரமாக கொல்லப்பட்டனர்.தாயின் மடியில் இருந்து பிடுங்கி தரையில் அறைந்த என் மூன்று வயது மகள் மீது கூட அவர்கள் கருணை காட்டவில்லை. எனது மனைவி, அவரது சகோதரிகளுடன் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டனர். எனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேர் கொல்லப்பட்ட நிலையில், பில்கிஸ் மயங்கி விழுந்ததால் கொலைவெறித் தாக்குதலில் இருந்து உயிர் தப்பினார்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்