India

இந்தியாவில் இனி 'TYPE -C' சார்ஜருக்கு மட்டுமே அனுமதி.. ஒன்றிய அரசின் திட்டத்துக்கு காரணம் என்ன ?

வரும் 2024-ம் ஆண்டு முதல் ஐரோப்பாவில் ஸ்மார்ட்போன் தொடங்கி அனைத்து வகையிலான மின்னணு சாதனங்களுக்கும் டைப்-சி சார்ஜர் முறை கட்டாயம் என ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணையம் புது விதி ஒன்றை நடைமுறைப்படுத்தியுள்ளது.

மின்னணு கழிவுகளை குறைத்து காற்றில் கார்பன் அளவை குறைக்க இந்த நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலும் இந்த நடைமுறை அமலுக்கு வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் நுகர்வோர் விவகாரங்களுக்கான செயலாளர் ரோஹித் குமார் சிங் இந்திய வர்த்தக மற்றும் தொழிற்துறை கூட்டமைப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பு, இந்திய மின்னணு பொருள்கள் உற்பத்தி சங்கம், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், கான்பூர் இந்திய தொழில்நுட்ப நிறுவனம், பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் பழைய மற்றும் புதிய ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்களுக்கு இடையே சார்ஜர்கள் பொருந்தாத காரணத்தால் அதற்கென புதிதாக பிரத்யேக சார்ஜர் மற்றும் கேபிளை வாங்க வேண்டி உள்ளது. இதற்கு தீர்வு காணும் நோக்கில் ஒரே வகையிலான சார்ஜர் கேபிளை பயன்படுத்துவதற்கான சாத்தியத்தை ஆராய்வது அவசியமாகி உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதில் இது குறித்து ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சாம்சங், சியோமி, ஒப்போ, விவோ மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்கள் ஏற்கனவே டைப்-சி போர்ட்டுக்கு மாறிவிட்ட நிலையில், இந்த கூட்டத்தில் இதர நிறுவனங்களையும் டைப்-சிக்கு மாற ஒன்றிய அரசு வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர ஸ்மார்ட் போன்கள், மலிவு விலையில் உள்ள பட்ஜெட் பிரிவு இயர்பட்கல், கிண்டில் மின்புத்தகங்கள் போன்றவற்றுக்கும் டைப்-சி போர்ட்க்கு மாற்றும் யோசனையில் அரசு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Also Read: ஆந்திர முதல்வரின் தாய் சென்ற காரின் இரண்டு டயர்களும் வெடித்ததால் அதிர்ச்சி.. ஓட்டுநரால் நடந்த அதிசயம் !