India

ரயில் டிக்கெட், ஹோட்டல் அறை முன்பதிவை ரத்து செய்தால் அதற்கும் ஜி.எஸ்.டி உண்டு.. ஒன்றிய அரசு அறிவிப்பு !

மோடி தலைமையிலான பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

தற்போது இந்தியா கடும் பொருளாதார நெருக்கடியில் இருந்து வரும் நிலையில், அரசி, பருப்பு, பால் உள்ளிட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி வரி விதித்துள்ளது. இது தவிர குழந்தைகள் பயன்படுத்தும் பென்சில் ஷார்ப்பனர், ரப்பர் மீதான ஜி.எஸ்.டி வரி 12% லிருந்து 18% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒன்றிய அரசின் இந்த முடிவிற்குக் காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றன. நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரின்போதும் எதிர்க்கட்சிகள் உணவுப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த நிலையில், ஹோட்டல் அறை, ரயில் டிக்கெட் அல்லது பொழுதுபோக்கு நிகழ்ச்சியை முன்பதிவு செய்து, இப்போது அதை ரத்து செய்தால் திரும்ப பெறப்படும் பணத்துக்கும் ஜி.எஸ்.டி வசூலிக்கப்படும் என ஒன்றிய அரசு தெளிவு படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ஹோட்டல்களில் முன்பதிவுகளை ரத்து செய்தல், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் ரயில் டிக்கெட்டுகள் போன்றவற்றை ரத்து செய்தால் ​​அவர் ஒரு குறிப்பிட்ட தொகையை ரத்து கட்டணமாக பெறுவார். அந்த கட்டணத்துக்கு ஜி.எஸ்.டி வரி வசூல் பொருந்தும் என கூறப்பட்டுள்ளது.

மேலும், மத மற்றும் தொண்டு நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் விடுதிகள் வசூலிக்கும் அறை வாடகைக்கு ஜி.எஸ்.டி பொருந்தாது என்றும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

Also Read: ஆட்சியமைத்து 1 மாதம் ஆகியும் பதவியேற்காத அமைச்சர்கள்.. பா.ஜ.க. அரசியலில் சிக்கித்தவிக்கும் மகாராஷ்டிரா !