India

8 ஆண்டுகளாக கொடுமை செய்த கணவர்.. வீடியோ வெளியிட்டு அமெரிக்காவில் தற்கொலை செய்து கொண்ட இந்திய பெண் !

உத்தர பிரதேச மாநிலம் பரியா என்ற கிராமத்தை சேர்ந்தவர் மந்தீப் கவுர் (வயது 30) என்ற பெண். சீக்கிய குடும்பத்தை சேர்ந்த இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ரஞ்சோத்பீர் சிங் சந்து என்பவருக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது.

பெற்றோர்கள் பார்த்து வைத்து திருமணமான இவர்களுக்கும் 6 மற்றும் 4 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ரஞ்சோத்பீர் சிங் சந்து லாரி ஓட்டும் பணிக்கு தன் குடும்பத்தையும் அமெரிக்கா அழைத்து சென்றுவிட்டார்.

இந்த நிலையில், ரஞ்சோத்பீர் சிங் சந்துவிற்கு ஆண் குழந்தை வேண்டி பல வருடங்களாக மந்தீப் கவுரை சித்திரவதை செய்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்த மந்தீப் கவுர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அந்த வீடியோவில், "என் கணவர் என்னை தினமும் அடித்து துன்புறுத்தி வருகிறார். இதற்கு மேல் என்னால் இதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. என் கணவர் அடிப்பதற்கு எனது மாமியாரும் உடந்தையாக இருக்கிறார். மேலும் அவரை தூண்டிவிடுகிறார்.

ஒவ்வொரு முறையும் குடித்து விட்டு என் கணவர் என்னை அடித்து காயப்படுத்தி வருகிறார். என் நிலையை குறித்து எனது தந்தை, காவல்துறையில் புகார் அளித்தார். இருப்பினும் அதனை கெஞ்சி கூத்தாடி வாபஸ் வாங்க வைத்த என் கணவர், அவர் மீது புகார் அளித்ததற்காக என்னை 5 நாட்கள் வீட்டில் அடைத்து வைத்து துன்புறுத்தினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, என் கணவருக்கு சில பெண்களுடன் உறவும் இருக்கிறது. இருப்பினும் நான் அதை சகித்துக்கொண்டு வாழ்வதற்கு காரணம், என்றாவது ஒரு நாள் எனது கணவர் ஒரு நாள் திருந்திவிடுவார் என்று நம்பினேன். ஆனால் இனி அது நடக்காது. இனியும் என்னால் முடியாது. நான் தற்கொலை செய்துகொள்ள போகிறேன். எனது இரண்டு மகள்களை மட்டும் யாராவது பார்த்துக்கொள்ளுங்கள்" என்று தெரிவித்து தற்கொலை செய்துகொண்டார்.

இந்த வீடியோ வெளியானதையடுத்து காவல்துறை அவரை கைது செய்து விசாரித்து வந்தது. அப்போது சம்பவ இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அந்த சிசிடிவி காட்சியில், ரஞ்சோத்பீர் சிங், மந்தீப் கவுரை அடிப்பதும், அப்போது அவர்கள் குழந்தைகள் அழுதுகொண்டே தந்தையிடம் கெஞ்சுவதும், அப்போது அவர் குழந்தைகளில் கழுத்தை நெரித்து தனக்கு 'ஆண் பிள்ளை தான் வேண்டும்' என்று கூறுவதும் இடம்பெற்றிருந்தது.

இதையடுத்து கணவன் ரஞ்சோத்பீர் சிங் சந்து விசாரிக்கப்பட்டு வருகிறார். மேலும் அமெரிக்காவில் உள்ள ஒரு இடத்தில் `மந்தீப்பிற்கு நீதி வேண்டும்’ என்ற வாசகத்தோடு மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதனிடையே தற்கொலை செய்துகொண்ட மந்தீப் கவுரின் தந்தை, தனது பேத்திகளின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் அவர்களை காவலில் வைக்க வேண்டும் என்றும், தனது மகளின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர உதவ வேண்டும் என்றும் அமெரிக்காவில் உள்ள அரசு மற்றும் சீக்கிய சமூகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த சம்பவம் இந்தியா - அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கேரளாவில் ஒரு காசி:'வீடியோ மூலம் பிரபலமாவது எப்படி?'-பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த டிக்டாக் பிரபலம் கைது