India

ஆங்கிலேயரிடம் ஓய்வூதியம் பெற்றவர் தியாகியா? - புதுவையில் தீவைத்து எரிக்கப்பட்ட சாவர்க்கர் புகைப்படம் !

நாட்டின் 75-வது சுதந்திர தினம் வரும் ஆகஸ்ட் 15ம் நாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி திடலில் 'சக்ரா விஷன் இந்தியா' அமைப்பு சார்பில் தியாகச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்த தியாகச்சுவரில் கடந்த 27-ம் தேதி இந்துத்துவ கொள்கை வாதியான சாவர்க்கர் பெயர் பலகையை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பதித்தார். இந்த தகவல் வெளிவந்ததும் பல்வேறு தரப்பினர் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

சாவர்க்கர் சுதந்திரப் போராட்டத்துக்கு எதிராக செயல்பட்டு பிரிட்டிசாரிடம் ஓய்வூதியம் பெற்றவர். அப்படி பட்டவரை தியாகச் சுவரில் பெயர் பலகை பதித்தது கண்டனத்துக்குரியது என பொதுமக்களும் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் சார்பில் தியாகச்சுவரில் இருந்து சாவர்க்கர் பெயர் பலகையை அகற்றும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சமூக அமைப்பினர் புஸ்ஸி வீதியில் உள்ள சின்னக்கடை மணிக்கூண்டு அருகே திரண்டனர்.

பின்னர் அங்கிருந்து 60-க்கும் மேற்பட்டோர் கடற்கரை சாலையில் அமைக்கப்பட்டுள்ள தியாகச்சுவரை நோக்கி புறப்பட்டனர். அவர்களை அந்த பகுதியில் அனுமதிக்காமல் போலிஸார் தடுத்த நிலையில், ஒன்றிய , மாநில அரசுகளை கண்டித்தும், துணைநிலை ஆளுநரை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர்.

மேலும், சாவர்க்கர் படத்தை தீ வைத்து எரித்தனர். அதை போலிஸார் தடுக்க முயன்ற நிலையில் அவை எரிந்து சாம்பலாகின. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 60க்கும் மேற்பட்டோரை கைது செய்த போலிஸார் பின்னர் அவர்களை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Also Read: OLA, UBER வாடகை டாக்ஸி சேவை - அரசே இயக்க நடவடிக்கை.. அமைச்சர் மனோ தங்கராஜ் அறிவிப்பு!