India

கெஜ்ரிவாலின் பேனரை கிழித்து மோடியின் பேனரை மாட்டிய டெல்லி போலிஸ்.. அரசு நிகழ்ச்சியில் நடந்த வன்முறை!

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெறும் நிலையில், முதலமைச்சராக அர்விந்த் கேஜ்ரிவால் இருந்து வருகிறார். அங்குள்ள அஸோலா வனவிலங்கு சரணாலயத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சி இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

முழுக்க முழுக்க மாநில அரசின் சார்பில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், விழா மேடையை அமைக்கும் பணியில் தொழிலாளர்களும், ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்களும் நேற்று இரவு முதலே ஈடுபட்டனர்.

மாநில அரசால் நடத்தப்படும் விழா என்பதால் அங்கு முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் புகைப்படங்களே இருந்துள்ளது. அப்போது அங்கு பாதுகாப்புக்காக வந்த போலிஸார்,விழா மேடையில் பிரதமர் நரேந்திர மோடியின் பேனர்கள் இல்லாததை கண்டுள்ளனர்.

பின்னர், விழா மேடைக்கு மோடியின் பேனர்களை எடுத்து வந்த போலிஸார் அங்கிருந்த ஆம் ஆத்மி கட்சியினரின் எதிர்ப்பையும் மீறி, வலுக்கட்டாயமாக மோடியின் பேனர்களை விழா மேடையில் கட்டினர். மேலும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் புகைப்படமும் போலிஸாரால் கிழிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு ஆம் ஆத்மி கட்சியினருக்கும் போலிஸாருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஆம் ஆத்மி கட்சியினர் மோடியின் புகைப்படத்தை அகற்றலாம் என்பதால் போலிஸார் அங்கேயே காவல் இருந்துள்ளனர். இந்த சம்பவம் டெல்லியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி போலிஸின் இந்த செயலால் கடும் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் அந்நிகழ்ச்சியை புறக்கணித்தார்.டெல்லி காவல்துறை ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், இது குறித்து கூறியுள்ள டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய், "இது முழுக்க முழுக்க டெல்லி அரசாங்கம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி. அதனால் பிரதமரின் புகைப்படங்கள் அங்கு வைக்கப்படவில்லை. ஆனால் டெல்லி போலீஸார் பிரதமர் மோடியின் பேனர்களை வைத்ததுடன் அவற்றுக்கும் காவலும் நின்றனர். மேலும், டெல்லி அரசின் பேனர்களையும் போலீஸார் கிழித்தெறிந்தனர்.இதனால் நிகழ்ச்சியை அர்விந்த் கேஜ்ரிவால் புறக்கணித்தார்" எனக் கூறியுள்ளார்.

Also Read: 4 மாதமாக லிவிங் டு கெதர் - சாப்பாடு செய்யாததால் காதலியை கொலை செய்த கொடூரம்.. நாடகமாடிய காதலர் கைது!