India

சித்து மூஸ்வாலா கொலை வழக்கு.. 2 குற்றவாளிகளை என்கவுண்டர் செய்த பஞ்சாப் போலிஸ்!

பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் சித்து மூஸ்வாலா. பிரபல பாடகரான இவர் அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

இவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால்காங்கிரஸ் ஆட்சியில் போலிஸார் பாதுகாப்பு வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ஆம் ஆத்மி அரசு அமைந்தது. இதையடுத்து சித்து மூஸ்வாலாவுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டது.

இதையடுத்து கடந்த மே 29ம் தேதி சித்து மூஸ்வாலா காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம கும்பல் அவரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தது. இந்த சம்பவம் பஞ்சாப் மாநிலம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பின்னர் இந்த கொலையில் தொடர்புடைய லாரன்ஸ் பிஸ்னோய், கோல்டி ப்ரார் ஆகிய இரண்டு பேரை போலிஸார் கைது செய்தனர். மேலும் மற்றவர்களை போலிஸார் தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில் சித்து மூஸ்வாலா கொலையில் தொடர்புடையவர்கள் பாக்னா கிராமத்தில் பதுங்கியுள்ளதாக போலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலிஸார் அங்குச் சென்று அவர்களை கைது செய்ய முயன்றனர்.

அப்போது போலிஸாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இதையடுத்து ஜக்ரூப் சிங் ரூபா மற்றும் மன்னு குஸ்ஸா ஆகிய இரண்டு பேரை போலிஸார் என்கவுண்டர் செய்துள்ளனர். மேலும் மூன்று போலிஸார் படுகாயம் அடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: பொதுமக்களுக்கு GST உயர்வு.. அம்பானிக்கு ஏற்றுமதி வரி ரத்து.. மோடி அரசின் செயலால் பொதுமக்கள் அதிர்ச்சி!