India
PM மோடி மீது தாக்குதல் நடத்த சதி திட்டம்: “RSS இதே வேலையைத்தான் செய்கிறார்கள்” - பீகார் SP சொன்னது என்ன?
பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள புல்வாரி ஷெரீப் பகுதியில் தீவிரவாத இயக்கம் ஒன்று செயல்பட்டு வருவதாக உளவுத்துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து ஜூலை 11ம் தேதி அப்பகுதியில் போலிஸார் மற்றும் உளவுத்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை செய்துள்ளனர்.
அப்போது தீவிரவாதிகளாக சந்தேகிக்கப்படுவதாக இருவரை கைது செய்துள்ளனர். இவர்களிடம் விசாரணை செய்ததில், ஜூலை 12ம் தேதி பிரதமர் மோடி வருகையின் போது தாக்குதல் நடத்த சதித்திட்டம் தீட்டியது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேபோல், பிரதமர் மோடியின் வருகைக்கு 15 நாட்களுக்கு முன்பாகவே சிலருக்கு ஆயுதப் பயிற்சி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதி என கைது செய்யப்பட்ட இருவரில் ஜலாவுதீன் என்பவர் ஜார்கண்ட் மாநிலத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவர் என்பதையும், மற்றொருவர் அதர் பர்வேஸ் என்றும் அடையாளம் கண்டுள்ளனர்.
இதையடுத்து உளவுத்துறை அதிகாரிகள் இவர்களிடம் விசாரணை நடத்தியதில், இவர்கள் தடைசெய்யப்பட்ட அமைப்புடன் தொடர்பில் இருந்தவர்கள் என்பதும், இஸ்லாமிய அமைப்பை ( PFI) சேர்ந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.
இந்த நிலையில் இது தொடர்பாக பாட்னா காவல் கண்காணிப்பாளர் மனவ்ஜீத் சிங் தில்லான் செய்தியாளர்களை நேற்று சந்தித்தார். அப்போது பேசிய அவர், "இஸ்லாமிய அமைப்புடன் தீவிரவாதிகள் சிலருக்கு தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கும், இவர்களின் கைதுக்கும் எந்த தொடர்பும் இல்லை" எனக் கூறினார்.
அப்போது இஸ்லாமிய அமைப்பின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த மனவ்ஜீத் சிங், "இஸ்லாமிய அமைப்பு உடற்பயிற்சி என்ற பெயரில் இளைஞர்களை தங்கள் மையத்துக்கு அழைத்து மூளைச்சலவை செய்கிறது. இதைதான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் செய்கிறது. ஆர்.எஸ்.எஸ் பயிற்சிகளிலும் லத்திகள் பயன்படுத்தப்படுகின்றன" எனக் கூறினார்.
இதைத் தொடர்ந்து காவல் கண்காணிப்பாளர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்பாக கூறியுள்ள கருத்துக்கு பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து மனவ்ஜீத் சிங்கின் கருத்துக்கு விளக்கம் அளிக்குமாறு பிகார் முதல்வர் நிதிஷ் குமார் உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு பல்வேறு கொலை, கலவர முயற்சிகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்பதும், மகாத்மா காந்தி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு தடை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!