India
"சிலுவண்டு சிக்கும் ஆனா சிறுத்த.. சிக்கிடுச்சே!" - தப்பித்த சிறை கைதி.. வலை விரித்து பிடித்த போலிஸ் !
கேரள மாநிலம், கோட்டயத்தைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றார். இதையடுத்து அவர் திருவனந்தபுரத்திலுள்ள பூஜப்புரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
அண்மையில் இவருக்கு பரோல் கிடைத்ததையடுத்து, தனது குடும்பத்தை காண சொந்த ஊருக்கு சென்றிருந்தார். ஆனால் பரோல் காலம் முடிந்த பின்பும் சிறைக்கு திரும்பாமல் இருந்ததால், அவரை தேடி காவல்துறையினர் வந்தனர்.
அப்போது அவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. இதையடுத்து அவரை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்ட காவல்துறையினர், ஒரு வழியாக பிடித்து நெட்டுக்கால்தேரியில் உள்ள சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு, மீண்டும் பூஜப்புரா மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட சுபாஷ், நேற்று சிறையில் உள்ள மதில் சுவர் அருகில் உள்ள ஒரு அலுவலகத்துக்கு கூட்டி செல்லப்பட்டார். அப்போது காவல்துறையினர் அசந்த நேரத்தில், நேக்காக தப்பித்து சென்றுள்ளார். தப்பித்த அவர், சுவர் மீது ஏறி அங்கிருந்த மரத்தில் ஏறியுள்ளார்.
இதையடுத்து விரைந்து வந்த காவல்துறையினர், சுபாஷை கீழே இறங்கும்படி கேட்டுக்கொண்டனர். இதனிடையே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர், சுபாஷ் கீழே விழுந்து விட கூடாது என்பதற்காக சுபாஷை பிடிக்க வலை விரித்து காத்துக்கொண்டிருந்தனர்.
இருப்பினும் கீழே இறங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சுபாஷ், தன்னை சிறை அதிகாரிகள் அடித்து துன்புறுத்துவதால், தான் நீதிபதியை உடனே நேரில் சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அப்போது நீதிபதியை பார்க்க வேண்டுமானால் மரத்தில் இருந்து கீழே இறங்குமாறு சுபாஷை காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில், அவரது எடை தாங்கமுடியாமல், மரக்கிளை திடீரென்று முறிந்து அவர் கீழே விழுந்தார். அப்போது தீயணைப்புதுறை வீரர்கள் விரித்து வைத்த வலையில் சிக்கினார். பின்னர் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
இது குறித்து சிறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "ஆயுள் தண்டனை கைதியான சுபாஷ் சிறையில் இருந்து தப்பிக்க முயன்றார். ஆனால் எப்படியோ அவரை நாங்கள் பத்திரமாக மீட்டோம். கடந்த சில நாட்களாக சுபாஷுக்கு மன ரீதியான பாதிப்பு இருக்கிறது" என்றார்.
சுமார் ஒன்றரை மணி நேரமாக சிறை கைதி சுபாஷ் மரத்தில் இருந்து இறங்க மறுத்து அதிகாரிகளுக்கு இடையூறு செய்துள்ள சம்பவம் அப்பகுதியில் பேசு பொருளாக மாறியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!