India

10 மாத குழந்தைக்கு ரயில்வே வேலை.. இந்திய வரலாற்றில் முதல் முறை.. பின்னணி என்ன?

சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த ராஜேந்திர குமார் என்பவர் ரயில்வே ஊழியராகப் பணியாற்றிவந்தார். இவர் கடந்த மாதம், தன் மனைவி மஞ்சு மற்றும் குழந்தை ராதிகா ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக இவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ராஜேந்திர குமார் மற்றும் அவரது மனைவி ஆகியோர் உயிரிழந்தனர். ஆனால் குழந்தை ராதிகா இந்த விபத்தில் பெரிய பாதிப்பு ஏதும் இன்றி உயிர் பிழைத்தார்.

இதைத்தொடர்ந்து ராஜேந்திரகுமாரின் குடும்பத்துக்கு ரயில்வே துறை சார்பில் அனைத்து உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் பணியில் இருக்கும்போது ஒருவர் உயிரிழந்தால் அவரது குடும்பத்தில் ஒருவரும் அரசு வேலை வழங்கப்படுவது வழக்கம்.

இதன் காரணமாக அவர் குடும்பத்தில் உயிரோடு இருக்கும் 10 மாத குழந்தை ராதிகாவுக்கு ரயில்வே வேலை வழங்க உத்தரவிடப்பட்டது. ராய்ப்பூர் ரயில்வே கோட்டத்தின் இந்த முடிவை தென்கிழக்கு மத்திய ரயில்வேயும் உறுதி செய்தது.

இதன் பின்னர், அலுவல் ரீதியான நடைமுறையின் படி, குழந்தை ராதிகாவின் கைரேகையைப் பதிவு செய்யப்பட்டது. இந்திய ரயில்வே வரலாற்றில் பத்து மாதக் குழந்தைக்கு அரசுப் பணி வழங்கப்படுவது இதுவே முதன்முறை என கூறப்படுகிறது.

பத்து மாதக் குழந்தை ராதிகா, 18 வயதை எட்டியதும் அவருக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் ரயில்வே வேலை வழங்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: ‘12 வருடத்துக்கு பிறகு உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி அண்ணா’- அடுத்த படம் குறித்து சிம்பு நெகிழ்ச்சி வீடியோ