India

கிளீனர் வேலை டூ CEO.. ஆஸ்திரேலியாவின் இளம் தொழிலதிபராக உயர்ந்த இந்தியர் - யார் இந்த ஆமீர் குதுப்?

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அலிகார் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆமீர் குதுப். இவர் MBA படிக்க விரும்பி சுமார் 6 ஆண்டுகளுக்கு முன்பு ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ளார். அங்குள்ள விக்டோரியா மாகாணத்தில் ஜிலாங் பகுதியிலுள்ள டீக்கின் பல்கலைக்கழகத்தில் MBA சேர்ந்தார். ஆரம்பத்தில் அவருக்கு சில மாதங்களுக்கு அரசு உதவித்தொகை கிடைத்தது. அதனால் அவரால் அங்கு எந்த வித பண பிரச்சனையும் இன்றி, இருக்க முடிந்தது.

ஆனால், அதன் பிறகு அவருக்கு பணத்தேவை அதிகமாக இருந்தது. வீட்டில் கேட்கலாம் என்று எண்ணினால், ஏற்கனவே தனது படிப்பிற்காக தனது தந்தையிடம் இருந்து, 5 லட்சத்திற்கும் மேல் பணம் வாங்கியதால் மீண்டும் அவரிடம் பணம் வாங்க அவர் விரும்பவில்லை.

எனவே Part Time ஆக வேலைக்கு செல்ல எண்ணியுள்ளார். அதன்படி சுமார் 300 நிறுவனங்களுக்கு விண்ணப்பம் செய்தார். ஆனால் அவர்களிடம் இருந்து எந்த பதிலும் பெரிதாக இவருக்கு சாதகமாக இல்லை.

பின்னர், கிடைத்த வேலைக்காவது செல்ல வேண்டும் என்று எண்ணிய அவர், அங்குள்ள அவ்லான் விமான நிலையத்தில் தூய்மைப் பணியாளராக சேர்ந்தார். ஆனால் அங்கு, வாரத்தில் 4 நாட்கள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பணியாற்ற வேண்டும் என்பதால், படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனவே அந்த வேலையை அவர் கைவிட்டார்.

இதையடுத்து, செய்தித்தாள் போடும் வேலை செய்துவந்தார். அப்படியே சிறிது நாட்களில், தனியார் ஐடி நிறுவனத்தில் Internship-ல் சேர்ந்தார். அங்கு அவரது பணிகள் சிறப்பாக இருந்ததால், 5000 ஆஸ்திரேலிய டாலர் சம்பளத்தில் பதவி உயர்வு பெற்றார். வெறும் 1 வருடத்திலே, அமீர் குதுப் இடைக்கால ஜெனரல் மேனேஜராக நியமிக்கப்பட்டார். இதையெல்லாம் படித்து கொண்டிருக்கும்போதே சாதித்த அவர், MBA முடித்த பின்னர் அவர் நிரந்தரமாக ஜெனரல் மேனேஜராக நியமிக்கப்பட்டார்.

தனது 25 வயதில் அயராத உழைப்பில், ஜெனரல் மேனேஜராக இருந்த அவர், ஒரு கட்டத்தில் தான் ஏன் ஒரு ஐடி நிறுவனம் தொடங்க கூடாது என்று எண்ணியுள்ளார். இப்படி எண்ணுகையில், ஒரு நாள் இரயிலில் பயணிக்கும்போது, தொழிலதிபர் ஒருவரின் அறிமுகம் கிடைத்ததால், அவரது வழிகாட்டுதல் கிடைத்துள்ளது. இதையடுத்து கடந்த 2014 ஆம் ஆண்டு 'என்டர்ப்ரைஸ் மங்கி' (Enterprise Monkey Proprietor Ltd) என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் தனது வங்கியில் இருந்த மொத்த பணத்தையும் (2000 டாலர்) முதலீடு செய்தார்.

இதைத்தொடர்ந்து கடினமாக உழைத்து கொண்டிருந்தார். தன்னால் தொடங்கப்பட்ட நிறுவனத்தில் தானே CEO-வாக பதவி வகித்த அவர், தற்போது 4 நாடுகளில் 100 பணியாளர்களுடன் இந்த நிறுவனத்தை செயல்பட வைத்துள்ளார். அதில் இந்தியாவும் அடங்கும்.

சொந்த நிறுவனம் தொடங்கிய 5 ஆண்டுகளில் அவரது வணிகம் 2 மில்லியன் ஆஸ்திரேலிய டாலராக (இந்திய மதிப்பில் ரூ.12 கோடி) உயர்ந்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் இளம் வணிக தலைவர் என்ற விருதையும் வென்றுள்ளார். இப்படி இவரது முயற்சியால் மேலும் நான்கு நாடுகளில் கிளைகளை அமைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Also Read: “பந்தயத்துக்கு நாங்க வரலாமா?” - 8 கிலோ சமோசா.. ஜெயிச்சா ரூ.50,000 பரிசு.. எங்க தெரியுமா ?