India

மாறிய புகைப்படம்.. மாலை மாற்றும்போது திருமணத்தை நிறுத்திய மணமகள் - சம்பவத்தின் பின்னணி என்ன?

உத்தர பிரதேச மாநிலம் பர்தானா என்ற நகரில் கடந்த புதன்கிழமை திருமணம் ஒன்று நடைபெறவிருந்தது. திருமண சடங்குகளில் ஒன்றான மாலை மாற்றிக்கொள்ளும் சடங்கு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, மணமக்கள் முதல்முறையாக நேரில் சந்தித்துக்கொண்டனர்.

அப்போது மணமகனை நேரில் பார்த்த மணமகள் கடும் அதிர்ச்சி அடைந்தார். உடனே தனக்கு நிச்சயம் செய்த நபர் இவர் இல்லை என்றும், இவர் கருப்பாக இருக்கிறார், என்னை ஏமாற்றிவிட்டார்கள், நான் இவரை திருமணம் செய்யமாட்டேன் எனக் கூறியுள்ளார். இதனால் அந்த திருமணம் பாதியில் நின்றுள்ளது.

தொடர்ந்து இரு வீட்டாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் புகைப்படத்தில் காட்டிய மாப்பிள்ளை வேறு, இவர் வேறு, புகைப்படத்தை மாற்றி காட்டி ஏமாற்றிவிட்டனர் என்று பெண் வீட்டார் குற்றம் சாட்டினர்.

இதற்கு மணமகன் வீட்டார், தங்களது மகனை திருமணம் செய்துக்கொள்வதாக பெண் வீட்டார், தங்களிடம் இருந்து பரிசுப்பொருட்கள் மற்றும் நகைகளை வாங்கிக்கொண்டு தற்போது ஏமாற்றுவதாக கூறினர். இதன் காரணமாக இந்த வாக்குவாதம் முடிவடையாமல் இருந்துள்ளது.

இதைத் தொடர்ந்து, மணமகன் வீட்டார் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக போலிஸார் விசாரணை நடத்தியதில், தாங்கள் மணமகன் வீட்டாரிடமிருந்து எந்த நகையும் வாங்கவில்லை என்றும், வாங்கிய பரிசுப்பொருள்களை திரும்ப கொடுத்துவிடுவதாகவும் கூறியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து மணமகள் வீட்டார், பரிசுபொருள்களை மணமகன் வீட்டாரிடம் ஒப்படைத்தனர். இதனால் காவல்நிலையத்தில் வழக்கு ஏதும் பதியப்படவில்லை. எனினும் திருமணம் பாதியில் நின்றுபோனதால் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: வங்கி ஊழியர்கள் குறித்து அவதூறு! குருமூர்த்தி மேல் நடவடிக்கை? -ஒன்றிய அமைச்சரின் கடிதத்தால் பரபரப்பு!