Air India
India

“ஏர் இந்தியா நிறுவனத்தில் தீண்டாமை கொடுமை” : 6 போ் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் அதிரடி நடவடிக்கை !

சென்னை விமான நிலைய ஏர் இந்தியா விமான நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றியவர் விமல் ராஜசேகரன். திருச்சியை சேர்ந்தவர் இவர், பட்டியலின வகுப்பை சோ்ந்தவா்.

இவா் கடந்த 2019 ஆம் ஆண்டு சென்னை விமான நிலையத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றும் போது, இவரின் உயர் அதிகாரிகளான ஏா்இந்தியா நிறுவனத்தின் பொது மேலாளர் வேல்ராஜ், ரீஜினல் டைரக்டர் ஹேமலதா, உதவி பொது மேலாளர் கண்ணன் முரளி, உதவி பொது மேலாளர் (நிர்வாகம்) ஆனந்த் ஸ்டீபன், லைசன் ஆபீசா் சத்தியா சுப்பிரமணியன், உதவிப் பொது மேலாளர் சுப்பிரமணியன் குட்டன் ஆகிய 6 பேர், இவருக்கு தொடர்ந்து அதிகமான பணி சுமை, பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர் என்று இவரை இழிவுபடுத்துவது, அவருடைய ஜாதி பெயரை சொல்லி அவமானப்படுத்துவது, போன்ற பல்வேறு நெருக்கடிகளை தொடர்ந்து கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இவர் இது சம்பந்தமாக ஏர் இந்தியா உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற குழுவினர் மற்றும் எஸ்.சி, எஸ்.டி தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கான பாதுகாப்பு பிரிவு உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்து புகார்களை செய்து வந்தார்.

விமல் ராஜசேகரன் தொடர்ந்து இதைப்போல் புகாா்கள் செய்ததால், இந்த உயா் அதிகாரிகள் இவருக்கு மேலும் பல்வேறு நெருக்கடிகளை கொடுத்ததாக கூறப்படுகிறது. கொரோனா வைரஸ் ஊரடங்கு முடிந்த பின்பும் இவரை மீண்டும் பணிக்கு அழைக்காமல் இருந்தது, இவர் அலுவலகத்தில் சுத்தம் சுகாதாரம் இல்லாமல் செய்தது, மிரட்டல் விடுத்தது, பொய் புகார்களை கூறியது தொடர்ந்து செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதை அடுத்து 2021 ஆம் ஆண்டு இவரை பணியிடை நீக்கம் செய்து, அதன் பின்பு இவரை நிரந்தரமாக பணி நீக்கம் செய்துவிட்டனர். இந்நிலையில் விமல் ராஜசேகரன் சென்னை விமான நிலைய போலிஸ் புகார் கொடுத்தார். அந்த புகாரும் நீண்ட நாட்கள் நிலுவையிலே இருந்தது.

இந்நிலையில் சென்னை விமானநிலைய போலிஸ், தற்போது அந்த புகாரின் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி விமல் ராஜசேகா் புகார்படி, அவரை சாதி ரீதியாக இழிவுப்படுத்தி, இவருக்கு பல்வேறு நெருக்கடிகளையும், தொல்லைகளும் கொடுத்ததாக ஏர் இந்தியா உயர் அதிகாரிகளான ஆறு பேர் மீதும் சென்னை விமான நிலையப் போலிஸார் வழக்குகள் பதிவு செய்துள்ளனா்.

சென்னை விமானநிலைய குற்ற எண்35/2022 படி, ஏா்இந்தியா உயா் அதிகாரிகள் 6 போ் மீதும், தீண்டாமை தண்டனை சட்டப்பிரிவு 3(1),(r), 3(1),(i),(s), 3(1)(q) மற்றும் தீண்டாமை ஒழிப்பு தண்டனை சட்டம் 2015 இன்படி வழக்குகள் பதிவு செய்துள்ளனா். அதோடு இந்த வழக்குகளின் முதல் தகவல் அறிக்கை செங்கல்பட்டு மாவட்ட முதன்மை நீதிமன்றத்திற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஏா் இந்தியா விமானநிலைய உயா் அதிகாரிகளில் வேல்ராஜ் என்பவா் தற்போது டெல்லியில் ஏா் இந்தியா நிறுவன பொது மேலாளராக பணியில் இருக்கிறாா். சுப்ரமணியன் குட்டன் பணி ஓய்வு பெற்றுவிட்டாா். ஹேமலதா, முரளி கண்ணன், ஆனந்த் ஸ்டீபன், சத்தியா சுப்ரமணியன் ஆகிய 4 போ் சென்னையில் பணியில் உள்ளனா்.

ஏா் இந்தியா விமான நிறுவனத்தில் பணியாற்றும் உயா் அதிகாரிகள் 6 போ் மீது சென்னை விமானநிலைய போலிஸார், தீண்டாமை ஒழிப்பு தண்டனை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “அது ஜோதிடர்கள் கொடுத்த மோதிரம் அல்ல.. ” : சந்திரபாபு நாயுடு அணிந்திருக்கும் மோதிரம் பற்றி தெரியுமா ?