India

மகளை காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் : மாப்பிள்ளையை விருந்து அழைத்து எரித்துக் கொன்ற மாமனார்!

தெலுங்கானா மாநிலம் போடலகொண்டப்பள்ளியைச் சேர்ந்தவர் நாராயண ரெட்டி (25). மென்பொறியாளரான இவரும், அதே பகுதியை சேர்ந்த வெங்கடேஸ்வர ரெட்டியின் மகளான ரவாளி என்பவரும் ரகசியமாக காதலித்து வந்தனர். ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் விவகாரம் பெண் வீட்டுக்கு தெரிய வர, அவர்கள் காதலை பெற்றோர் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவராக இருந்தாலும் கூட பல்வேறு காரணங்களை சொல்லி அவர்களுக்கு மறுப்பு தெரிவித்தனர்.

இதனால் கடந்த ஆண்டு நாராயண ரெட்டியும், ரவாளியும் சட்டபூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும் அவர்கள் திருமணத்தை ஏற்றுக்கொள்ளாத பெண்ணின் பெற்றோர்கள் தனது மாப்பிள்ளை நாராயண ரெட்டி மீது தீராத பகையை கொண்டிருந்தனர்.

மேலும் தங்கள் பேச்சை மீறி திருமணம் செய்ததால், அண்மையில் தங்களது மகளை வலுக்கட்டயமாக தங்களுடன் கூட்டி சென்றுள்ளனர். இதனால் நாராயண ரெட்டி தனது மனைவியை மீட்டுத்தருமாறு நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

தனது குடும்ப விவகாரம் கோர்ட் வரை சென்றதால், ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் தந்தை, தனது உறவினர் சீனிவாச ரெட்டியை அணுகியுள்ளார். அவர்களுடன் கூட்டு சேர்ந்து சதி திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி, கடந்த ஜூன் 27 ஆம் தேதி, பெண் வீட்டார் தனது மாப்பிள்ளை நாராயண ரெட்டியை சமரசம் பேச விருந்துக்கு அழைத்துள்ளனர். இவர்களை நம்பி அவரும் சென்றுள்ளார்.

அப்போது நாராயண ரெட்டிக்கு மதுவில் விஷம் கலந்து கொடுத்து, அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர். பின்னர் அவரது உடலை ஜின்னாராம் பகுதியில் உள்ள காட்டிற்குள் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து நாராயண ரெட்டியை காணவில்லை என அவரது உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பெண் வீட்டார் மீது சந்தேகம் ஏற்படவே அவர்களை பிடித்து விசாரிக்கையில், தங்களது கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட நாராயண ரெட்டியின் உடலை கைப்பற்றிய காவல்துறையினர், அதை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பெண்ணின் தந்தை வெங்கடேஸ்வர ரெட்டி, அவரது உறவினர் சீனிவாச ரெட்டி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: மீண்டும் உலகளவு ட்ரெண்டிங்கில் 'வாத்தி கம்மிங்'.. டென்னிஸ் ஜாம்பவானை வரவேற்ற விம்பிள்டன்: ரசிகர்கள் குஷி!