India

"எதாவது தப்பு பண்ணினா.. என் தலையை நானே வெட்டிடுவேன்.." - நீதிபதியின் பேச்சால் அதிர்ச்சி !

கர்நாடக மாநிலம் உயர்நீதிமன்றத்தில், தலைமை நீதிபதியாக ரிது ராஜ் அவஸ்தி பொறுப்பு வகித்திருந்தார். சமீபத்தில் நடந்த ஹிஜாப் விவகாரம் குறித்து மாணவிகள் தாக்கல் செய்த மனுவானது, இவர் தலைமையில் தான் விசாரிக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் இவர் தற்போது ஓய்வு பெற்றிருக்கும் நிலையில், பார்ட்டி ஒன்றை ஒருங்கிணைத்திருந்தார். இதில் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், வழக்கறிஞர்கள், நீதிபதிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதில் உயர்நீதிமன்ற நீதிபதி வீரப்பா கலந்துகொண்டார். அப்போது ஒவ்வொருவரும் பேசும்போது நீதிபதி வீரப்பாவும் பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், "நீதிமன்ற நடவடிக்கைகளின்போது அவதூறாகவும், ஆதாரமற்ற வகையிலும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் செயல்படுவதாக சில வழக்கறிஞர்கள் குற்றம் சுமத்துகின்றனர். ஒரு நீதிபதியாக நான் ஏதேனும் தவறு செய்தால் விதானசவுதா (கர்நாடக சட்டமன்றம்) முன்பு நின்று நானே என் தலையை துண்டித்து கொள்கிறேன்" என்று ஆவேசமாக பேசினார்.

இவரது இந்த பேச்சு அங்கிருந்தவர்களுக்கு அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”எனக்கு முதலில் கிடைத்தது பதவிகள் அல்ல, சித்திரவதைகள்தான்” - அரசியல் பயணம் குறித்து நெகிழ்ந்த முதல்வர்!