India

இந்திய மாணவரின் திறமை கண்டு வியந்து கோடிக்கணக்கில் ஊதியம் கொடுக்க முன்வந்த Google, Amazon, Facebook !

இன்றைச் சூழ்நிலையில் இளைஞர்களுக்கு வேலை கிடைப்பது என்பதே பெரிய போராட்டமாக மாறியுள்ளது. அப்படியும் மீறி வேலை கிடைத்தாலும் அதில் தொடர்ந்து நீடிப்பதும் சிக்கலாக உள்ளது.

இந்நிலையில் கொல்கத்தாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு உலகிலேயே மூன்று பெரிய நிறுவனங்களிலிருந்து பணி நியமன ஆணை வந்துள்ளது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

கொல்கத்தாவைச் சேர்ந்தவர் பிசாக் மொண்டல். இவர் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். இன்னும் ஒரு செமஸ்டர் தேர்வு உள்ள நிலையில் இவர் உலகின் முன்னணி நிறுவனங்களான அமேசான், கூகுள், ஃபேஸ்புக் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளார்.

இந்நிலையில் இந்த மூன்று நிறுவனங்களிலிருந்தும் பல்கலைக்கழக மாணவர் பிசாக் மொண்டலுக்கு பணி நியமண ஆணை வந்துள்ளதால் அவர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். அதிலும் ஃபேஸ்புக் நிறுவனம் ரூ.1.8 கோடியி ஊதியத்தில் அவரை வேலைக்கு எடுப்பதாகக் கூறியுள்ளது.

இது குறித்து பிசாக் மொண்டல் கூறுகையில், "பெரிய நிறுவனத்தில் சேர வேண்டும் என்ற என்னுடைய நீண்ட நாள் ஆசை நிறைவேறியுள்ளது. இந்த வாய்ப்புக்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

கொரோனா தொற்று காலத்தில் பல நிறுவனங்களில் இன்டர்ன்ஷிப் செய்தேன். இந்த அனுபவம் தான் தற்போது இந்த இடத்திற்குக் கொண்டு வர உதவியுள்ளது. ஃபேஸ்புக் அதிக ஊதியம் கொடுப்பதாலேயே அதில் நான் சேர முடிவு செய்துள்ளேன்" என தெரிவித்துள்ளார்.

புதிய வேலை வாய்ப்புகளை ஃபேஸ்புக் நிறுவனம் குறைத்து வரும் நிலையில் பிசாக் மொண்டலுக்கு ரூ.1.8 கோடி ஊதியத்தில் வேலை கிடைத்துள்ளது என்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது

Also Read: காதலியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்.. உ.பி-யில் ஆச்சரிய சம்பவம்!