India

"கல்வி,அதிகாரம் ஒரு சாதிக்கு சொந்தம் கிடையாது, இடஒதுக்கீடு நம் உரிமை"!கர்நாடக முன்னாள் முதல்வர் ஆவேசம்!

குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே கல்வி,அரசு வேலைகளில் இடம்பெறுகிறார்கள் என்பதால் நாட்டில் இடஒதுக்கீடு முறை பல போராட்டங்களுக்கு பின்னர் அமல்படுத்தப்பட்டது. ஆனால் சிலர் சாதிய பாகுபாட்டை நீக்கி சமத்துவத்தை கொண்டு வரவே இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது என்பதை மறைத்து இடஒதுக்கீட்டால்தான் சாதி இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள்.

இந்த நிலையில் கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா பெங்களூரில் நடைபெற்ற புத்தக வெளியீட்டுவிழா ஒன்றில் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``கல்வி, அதிகாரம், வளங்கள் இவையனைத்தும் எந்த ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கும் சொந்தமானது கிடையாது.

ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் நலனைப் பாதுகாக்க சமூகத்தில் சாதி அமைப்பு தொடங்கப்பட்டது. ஆனால், இப்போது சாதி அமைப்புக்குக் காரணமானவர்கள் இட ஒதுக்கீடு முறையைக் கேள்விக்குள்ளாக்குகிறார்கள்"என கூறினார்.

மேலும், ”இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல. இட ஒதுக்கீடு என்பது நமது அரசியல் சாசன உரிமை. நீண்டகாலமாக அமைதியாக இருந்தோம். இன்னும் அமைதியாக இருந்தால் சமத்துவ சமுதாயத்தை உருவாக்க முடியாது. சுயமரியாதை இருந்தால்தான் நாம் மரியாதையாக வாழ முடியும். சூத்திரர்களின் பெரும் பகுதி மக்களுக்கு எழுத்தறிவு மறுக்கப்பட்டதும், வாய்ப்பும் மறுக்கப்பட்டதும் அநீதி அல்லவா? அதை பேசமாட்டார்கள்.

சிலர் மத்திய கிழக்கிலிருந்து ஆரியர்கள் இங்கு வந்து திராவிடர்களாகிய நம் மீது அட்டூழியங்களைச் செய்தார்கள் என்று சொன்னால் கோபம் வரும். அதனால் நம்மில் பலரும் இதுகுறித்து பேசுவதில்லை. இது நாட்டிற்கும், சமூகத்திற்கும் சரியாக இருக்காது " என விமர்சித்தார். இவரது இந்த பேச்சு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: சாண்ட்விச்சில் மயோனிஸ் அதிகமாக போட்ட ஊழியர்.. கோபத்தில் துப்பாக்கியை எடுத்து சுட்டுக்கொன்ற வாடிக்கையாளர்!