India

ராணுவ வீரரை துப்பாக்கியால் சுட்ட மணமகன்.. திருமண நிகழ்வில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

உத்தர பிரதேச மாநிலம், சோன்பத்ரா என்ற மாவட்டத்தில் உள்ள ராபர்ட்ஸ்கஞ்ச் என்னும் இடத்தில் வசித்து வருபவர் மணீஷ் மாதேஷியா. இவருக்கும் அந்த பகுதியில் உள்ள ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது.

இவர் திருமணத்தின்போது மணமகன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக மணமகனின் நெருங்கிய நண்பரான ராணுவ வீரரான ஹவில்தார் பாபுலால் என்பவரிடம் இருந்து துப்பாக்கி தயார் செய்யப்பட்டுள்ளது. இவர் ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்பு படையில் இடம் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் திருமணத்தின்போது, பாபுலாலிடம் இருந்து துப்பாக்கியை பெற்ற மணீஷ் மாதேஷியா அதை வைத்து வானத்தை நோக்கி சுட்டுள்ளார். அப்போது அந்த துப்பாக்கி வேலை செய்யவில்லை. இதன் காரணமாக அதை சோதனை செய்ய கீழே இறக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த துப்பாக்கி வெடித்துள்ளது.

இதில், துப்பாக்கி குண்டு கீழே நின்ற மணமகனுக்கு துப்பாக்கியை கொடுத்த ராணுவ வீரரான பாபு என்பவர் மேல் பாய்ந்துள்ளது.

இதில் படுகாயமடைந்து கீழே விழுந்த பாபுவை அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், இவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக கூறியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வரும் துப்பாக்கி கலாச்சாரத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தற்போது எழுந்துள்ளது.

Also Read: தனியே செல்லும் முதியவர்கள் டார்கெட்.. ஆண் நண்பர்களுடன் சேர்ந்து செல்போன் திருட்டு.. 16 வயது சிறுமி கைது!