India
முன்னாள் வீரர்களுக்கே வேலை கிடைக்காத சோகம்.. அக்னி வீரர்களின் எதிர்காலம் ? - ஆய்வு முடிவால் அதிர்ச்சி!
ஒன்றிய பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். முக்கியமாக வட மாநிலங்களில் தீவிரமாகப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலிஸார் தடியடி தாக்குதல் நடத்தியதால், ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் ரயில்களுக்குத் தீவைத்த சம்பவமும் அரங்கேறியுள்ளது. அதுமட்டுமல்லாது பீகாரில் இந்த திட்டத்தை ஆதரித்துப் பேசிய பா.ஜ.க தலைவர்களின் வீடுகள், அலுவலகங்களைச் சூறையாடித் தீ வைத்துள்ளனர்.
மேலும் தெலுங்கானாவில் இந்த திட்டத்தை எதிர்த்துப் போராடியவர்கள் மீது ரயில்வே போலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்க்கட்சிகளான தி.மு.க, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த திட்டம் தொடர்பாக பேசிய பா.ஜ.க தலைவர்கள், அக்னிபாத் திட்டத்தில் சேரும் வீரர்களுக்கு ராணுவப் பணி முடிந்த பிறகு பா.ஜ.க அலுவலகத்தில் செக்யூரிட்டி வேலை கொடுக்கப்படும் என கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல்வேறு அரசு நிறுவனங்களில் அக்னி வீரர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர சில தனியார் நிறுவனங்களும் அக்னி வீரர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்த நிலையில், அரசு நிறுவனங்களில் முன்னாள் படை வீரர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணிகள் கூட அவர்களுக்கு முழுமையாக கிடைக்கவில்லை என்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக வெளிவந்துள்ள ஆய்வு முடிவுகளில், சி' பிரிவு வேளைகளில் முன்னாள் படை வீரர்களுக்கு 10% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நடந்த தேர்வில் முன்னாள் படை வீரர்கள் 1.15% பேர் மட்டுமே தேர்வாகி உள்ளனர்.
இதேபோல 'டி' பிரிவில் 20% இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டு தேர்வில் 0.3% முன்னாள் படை வீரர்கள் மட்டுமே தேர்வாகி உள்ளனர். இதுதவிர பாதுகாப்பு சார்ந்த 10 பொதுத் துறை நிறுவனங்களில் அக்னி வீரர்களுக்கு 10% இடங்கள் ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கூட குருப் 'சி' பிரிவில் 3.45%, குருப் 'டி' பிரிவில் 2.71% வேலைகள் மட்டுமே முன்னாள் படை வீரர்களுக்கு கிடைத்துள்ளது.
மேலும், இந்திய ரயில்வேயில் உள்ள 11.50 லட்சம் இடங்களில் 16,264 வேலைகள் மட்டுமே முன்னாள் வீரர்களுக்கு கிடைத்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் வீரர்களுக்கு இது போன்ற வேலைகள் கிடைக்காததற்கு காரணம், அரசு தேர்வுகளில் முன்னாள் படை வீரர்கள் தேர்ச்சி அடைய இயலாததும், அதற்கு தேவையான திறன் அவர்களிடம் இல்லாததும் இந்த ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.
இதன் மூலம் ஓய்வூதியம் உள்ளிட்ட அனைத்து வேலை பயன்களும் கிடைத்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கே இந்த நிலை இருக்கும் நிலையில், போதிய கல்லூரி படிப்பும் முடிக்காமல், ஓய்வூதிய பலன்களும் இல்லாமல் ராணுவத்தில் இருந்து வெளிவரும் அக்னிவீரர்களின் எதிர்கால நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
Also Read
-
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!