India

இஸ்லாமியர்களை தாக்க YOUTUBE -ஐ ஆயுதமாக பயன்படுத்தும் இந்துத்துவ கும்பல்: வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் பா.ஜ.க மற்றும் அதன் ஆதரவாளர்கள் உள்ளிட்ட இந்துத்துவ தேசியவாத குழுக்கள், சதி கோட்பாடுகள் மற்றும் அச்சுறுத்தும் யூடியூப் வீடியோக்களைப் பயன்படுத்தி நாடு முழுவதும் உள்ள இஸ்லாமியர்கள் மற்றும் பெண்களை தவறாக சித்தரிப்பதாக NYU ஸ்டெர்ன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் &மனித உரிமை என்ற அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், உலகம் முழுவதும் வலதுசாரிகள் யூடியூப் வீடியோக்களைப் பயன்படுத்தி சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாக கூறியுள்ளது. மேலும், இந்தியாவில் பா.ஜ.க மற்றும் இந்துத்துவ ஆதரவாளர்கள் எவ்வாறு இஸ்லாமியர்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள் எனவும் ஆராய்ந்து அறிக்கை அளித்துள்ளது.

அதில், இஸ்லாமியர்கள் வேண்டுமென்றே மக்களின் உணவில் எச்சில் துப்புவதன் மூலம் கொரோனா வைரஸை பரப்புகிறார்கள் என்ற குற்றச்சாட்டை வலதுசாரிகள் சமூக வலைதளங்கள் மூலம் நாடு முழுக்க பரப்பினர் எனவும், இதன் மூலம் இஸ்லாமிய வியாபாரிகளை நேரிடையாக அச்சுறுத்தினர் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கொரோனா ஜிகாத் என அழைக்கப்பட்ட இந்த கோட்பாட்டை இந்தியாவின் பல்வேறு முக்கிய ஊடகங்களும் பரப்பினர் எனவும் கூறப்பட்டுள்ளது. இதை பரப்ப வலதுசாரிகள் பல கோடி பேர் பயன்படுத்தும் யூடியூப் வலைதளத்தை பயன்படுத்தினர் எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தவிர இஸ்லாமிய பெண்கள் மீதான ஆன்லைன் தாக்குதல்களைக் கொண்ட வீடியோக்களின் அதிகரிப்புடன், இந்தியாவில் யூடியூப் மூலம் இஸ்லாமிய வெறுப்பைப் போல பெண் வெறுப்பை பரவுவதும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் தனிப்பட்ட தகவல்களை பயன்படுத்தி அவர்களை தவறாக சித்தரிக்க யூடியூப் வலைதளம் பயன்பட்டது எனவும், பணம் சம்பாதிக்க இது போன்ற வழிகள் ஏற்பட்டதும் இது போன்ற வீடியோக்கள் அதிகரித்தன எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது போன்று பரப்பப்பட்ட சில வீடியோக்களை யூடியூப் நிர்வாகம் நீக்கினாலும், வெறுக்கத்தக்க மற்றும் ஆபத்தான உள்ளடக்கத்துடன் தவறான தகவலைப் பரப்புபவர்கள், யூடியூப்பில் பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதும் இதற்கு யூடியூப் நிர்வாகம் உடந்தையாக இருப்பதையும் இந்த அறிக்கை கோடிட்டு காட்டுகிறது.

அதோடு யூடியூப் வீடியோக்களை பகுப்பாய்வு செய்ய போதிய ஊழியர்கள் அந்த நிறுவனத்தில் இல்லை என்பதையும், ஆங்கிலம் தவிர்த்த பிற மொழிகளில் யூடியூப் வீடியோ போதிய பகுப்பாய்வு செய்யவில்லை எனவும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தொடர்ச்சியாக இந்துத்துவ கும்பல் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் நடந்து வரும் நிலையில் சமூக வலைதளமான யூடியூபையும் பயன்படுத்தி வெறுப்பு அரசியலை விதைத்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ஹெலிகாப்டர் பிசினஸ் பன்னனும்.. ரூ.6.65 கோடி கடன் கொடுங்க : வங்கியில் முறையிட்ட விவசாயி!