India
‘நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று’ : நாடுமுழுவதும் காங்கிரசின் எழுச்சி கண்டு மிரண்டு போன பா.ஜ.க அரசு!
‘நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று’ - எனச் சொல்வார்களே; அது பி.ஜே.பி.க்கு இப்போது நடந்துள்ளது. அமலாக்கத் துறை மூலம் சம்மன் அனுப்பி ‘விசாரணை’ என்று கூறி, காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியத் தலைவர்களான சோனியா அம்மையாரையும், ராகுல் காந்தியையும் அழைத்தால் அவர்கள் அடங்கி ஒடுங்கி விடுவார்கள் - பி.ஜே.பி.யின் மதவெறிப் பேச்சுக்கு அண்மையில் வளைகுடா நாடுகள் கண்டனம் தெரிவித்த நிலையில், ‘அன்பும் - சகோதரத்துவமும் நிறைந்த பாதைதான் இந்தியாவை முன்னேறச் செய்யும்.
இது இந்தியாவை ஒன்றிணைக்கும் நேரம்’ - என ராகுல் காந்தி தெரிவித்த கருத்துக்குக் கிடைத்த வரவேற்பாலும் மிரண்ட பி.ஜே.பி. அவரது தொடர் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும் - விவகாரத்தை திசை திருப்பவும் சில காலங்களாக ஆதாரமற்ற நிலையில் கிடப்பில் கிடந்த ‘நேஷனல் ஹெரால்ட்’- விவகாரத்தை தூசுதட்டி எடுத்து - அமலாக்கத் துறை முன் ஆஜராகக் கோரி சோனியா அம்மையாருக்கும் ராகுல் காந்திக்கும் ‘சம்மன்’ அனுப்பியது! விளைவு; நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாகிவிட்டது.
சிறிது காலங்களாக சோர்ந்திருந்த காங்கிரசை பி.ஜே.பி. அரசின் நடவடிக்கை சிலிர்த்தெழச் செய்துவிட்டது! பா.ஜ.க.வின் பழிவாங்கும் நடவடிக்கைக்கு எதிராக நாடெங்கும் காங்கிரசின் போர்க்குரல்கள் ஒலிக்கின்றன. தலைநகர் டெல்லியில் ஓர் பதற்றநிலை உருவாகியுள்ளது. கடந்த மூன்று தினங்களாக ஆங்கில செய்தித் தொலைக்காட்சிகளில் காங்கிரசின் தொடர் போராட்டமும், ராகுல்காந்தி தினமும் வரவழைக்கப்பட்டு மணிக்கணக்கில் விசாரிக்கப்படும் செய்திகளும் வருகின்றன. மாலையில் இது தொடர்பாக விவாதங்கள் நடைபெறுகின்றன.
முதல் நாள் ராகுல்காந்தி அமலாக்கத் துறையின் “சம்மன்” ஏற்று அதன் அலுவலகத்துக்குச் சென்ற போது அவரைத் தொடர்ந்து காங்கிரசின் முன்னணித் தலைவர்கள், காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் தொடர்ந்தனர்.
நாடெங்கும் காங்கிரஸ் தொண்டர்கள் ஆங்காங்கே உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்படி இந்தியா முழுதும் தொடர்ந்த பதற்ற நிலைகண்டு மிரண்டு போன பி.ஜே.பி. அரசு, அவசர அவசரமாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியை செய்தியாளர்களைச் சந்திக்க வைத்து விளக்கம் கூறுமளவுக்கு அன்றைய தினத்தின் காங்கிரஸ் எழுச்சி அமைந்துவிட்டது.
இதைத்தான் ‘நினைத்தது ஒன்று; நடந்தது ஒன்று’ என்பார்கள். காங்கிரசை அலட்சியமாகப் பார்த்த பி.ஜே.பி.யை இப்போது அரண்டு பார்க்க வைத்து விட்டது! காங்கிரசின் எழுச்சி கண்டு மிரண்டதால் அன்று தன்னிலை விளக்கம் தர வேண்டி அவசர அவசரமாக ஸ்மிருதி இரானியை பி.ஜே.பி. களம் இறக்கியது.
யாரும் தங்களை எதுவும் செய்திட இயலாது என்ற போக்கில் இறக்கிட முடியாத உச்சத்தை எட்டிவிட்டதாகக்கருதிய பி.ஜே.பி.யின் தலைமையை இறங்கி வர வைத்துள்ளது நாடெங்கும் எழுந்த எழுச்சி!
காங்கிரசால் உருவானது சிறிய எழுச்சியாக சிலருக்குத் தோன்றலாம். இதுபோன்ற சிறிய எழுச்சிகள்தான் சிறுபொறி பெருந்தீயாக மாறுவது போல பெரிய புரட்சிகளுக்கு அடித்தளம் அமைத்து, தங்களை அசைக்க முடியாது என்று எண்ணியிருந்த சாம்ராஜ்யங்கள் பலவற்றைத் தகர்த்து தரை மட்டமாக்கி உள்ளன.
எமர்ஜென்சிக்குப் பிறகு 1977-ல்நடைபெற்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பரிதாபகரமான தோல்வியை வடமாநிலங்கள் அனைத்திலும் அடைந் தது. இனி காங்கிரஸ் தலை எடுப்பது சுலபமல்ல என்று நாடெங்கும் பேசப்பட்டது. அந்த இயக்கமும் சோர்ந்திருந்தது. இந்த நிலையில் இந்திராஅம்மையார் மொரார்ஜி தேசாய் அரசால் பழி வாங்கும் போக்கில், பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டார். அப்போது அந்த கைதுக்கான காரணம் ஜீப் ஊழல் வழக்கு என்று கூறப்பட்டது. மறுநாள் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட இந்திரா அம்மையாரை நீதிமன்றம் விடுவித்தது. குற்றச்சாட்டில் எள்ளளவு உண்மை கூட இல்லை என்றும் நீதிமன்றம் விடுதலைக்கான காரணத்தையும் கூறியது!
அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயின் பழிவாங்கும் போக்கு அத்தோடு நிற்கவில்லை. பாராளுமன்றத்தினை அவமதித்தார் என்று ஒரு உரிமை மீறல் பிரச்சினையை கொண்டு வந்து இந்திரா அம்மை யாரை சிறையில் அடைத்தார்!
விளைவு; 1977 தேர்தல் தோல்வியால் சுணங்கிக் கிடந்த காங்கிரஸ் இயக்கம், இந்திராகாந்தி அம்மையார் மீது பழிவாங்கும் போக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்பதை மக்களும் உணர்ந்துள்ள நிலையில், மக்கள் ஆதரவைப் பெற்றது!
1980 ஆம் ஆண்டு தேர்தலில் இந்திரா காங்கிரஸ் 353 இடங்களைப் பெற்றது. பழி வாங்கும் போக்கில் பொய் வழக்கு தொடர்ந்த ஜனதா கட்சி 31 இடங்களைப்பெற்றது!
(அந்தத் தேர்தலின்போதுதான் - “நேருவின் மகளே வருக! நிலையான ஆட்சி தருக” என தமிழினத் தலைவர் கலைஞர் அழைப்பு விடுத்தார்; என்பதும் குறிப்பிடத்தக்கது).
அரசியலில் தங்கள் கட்சிக்கு மிருகப் பெரும்பான்மை கிடைத்து விட்டது.எதிர்க்கட்சிகள் எல்லாவற்றையும் அடக்கி, மிரட்டி ஒழித்து விடலாம் என்ற ஆணவப் போக்குக்கு பல நேரங்களில் மரண அடிகிடைத்துள்ளது என்பதை பி.ஜே.பி. உணர வேண்டும்!
இன்று ராகுல்காந்திக்கு சம்மன் அனுப்பி அழைத்து மூன்று நாட்களாக - அவரை அமலாக்கத்துறை மூலம் முடக்க நினைத்தது பி.ஜே.பி. ஆனால் காங்கிரஸ் நாடெங்கும் எழுந்து நிற்கிறது!
இப்போது எழுந்துள்ள எழுச்சியை தொய்வின்றி எடுத்துச்செல்ல வேண்டியது காங்கிரஸ் தலைமையின் கையில்தான் உள்ளது. உ.பி.யில் நடைபெறும் புல்டோசர் இடிப்பு வேலைகள் - மதநல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையில் தொடர்ந்து நடைபெறும் நடவடிக்கைகள் - வளைகுடா நாடுகளின் கண்டனம் - இந்திய அரசியல் சாசனம் நாட்டிற்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகள் நாளும் தகர்க்கப்படுவதைக் கண்டு கொள்ளாதது - விஷம் போல் ஏறும் விலைவாசி உயர்வு - நாட்டின் பொருளாதாரச் சீரழிவு; இப்படி அடுக்கிட இடமில்லாத வகையில் பி.ஜே.பி.
அரசால் உருவாகியுள்ள நாசகார வேலைகளை மக்கள் உணரத்தொடங்கி விட்டனர். நாசகார சக்திகளை நாடறிய நல்ல சந்தர்ப்பத்தை பி.ஜே.பி.யினரே உருவாக்கி வருகின்றனர். ஆணவ, அகங்கார, அடக்குமுறை ஆட்சியை அகற்ற தொடர்ந்து ஒன்றிணைந்துபோராட வேண்டும்! விட்டுக்கொடுக்கும் மனப்பக்குவத்துடன் போராட வேண்டும். நாட்டை நாசகார சக்திகளிடமிருந்து காத்திட நல்ல தருணம் இது! “ஒளியில்தான் நமது நிழலின்வடிவம் நமக்குத் தெரிகிறது. சோதனையில் தான் நம் வலிமைநமக்குத் தெரிகிறது” என்றார்முத்தமிழறிஞர் கலைஞர்! தொடரட்டும் எழுச்சி!
- சிலந்தி
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!