India

அக்னிபாத் திட்டம் : “RSS கனவு திட்டத்தை நிறைவேற்ற துடிக்கும் ஒன்றிய அரசு” - வடக்கே ஏன் போராட்டம் ?

இன்று (16/06/22) மத்திய இந்தியாவான ஹரியானா, பிகார், உத்தரப்பிரதேச மாநிலங்களில் ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக இளைஞர்கள் பெரும் போராட்டங்கள் நடத்தத் தொடங்கியிருக்கின்றனர்.

அக்னிபாத் திட்டம் என்பது என்ன?

கடந்த செவ்வாய் கிழமை அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அக்னிபாத் திட்டத்தை அறிவித்தார். அக்னிபாத் திட்டத்தின்படி இந்திய ராணுவத்தின் முப்படைகளில் சேர இந்திய நாட்டு மக்கள் விண்ணப்பிக்கலாம். மொத்தம் 40,000 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்கள் அனைவருக்கும் அவரவரின் தேர்ச்சிக்கு ஏற்ப பயிற்சி கொடுக்கப்படும். பிறகு பணி அளிக்கப்படும். ஆனால் பணி நான்கு வருடங்கள்தான். 25% பேரின் பணி மட்டும் நிரந்தரம் செய்யப்படும்.

அக்னிபாத் திட்டம் இந்திய ராணுவத்துக்கு இளையத் தோற்றத்தைக் கொடுக்கும் என்றும் ராணுவத்தை நவீனமாக்கும் முயற்சிகளில் ஒன்றே அக்னிபாத் திட்டம் என்றும் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்திருக்கிறார்.

என்ன விமர்சனம்?

அடுத்த இரண்டு மாதங்களில் 40,000 பேருக்கான தேர்வு நடக்கவிருக்கிறது. தேர்ந்தெடுக்கப்படும் மொத்த பேரும் நான்கு வருடங்கள் மட்டுமே பணியில் இருக்க முடியும். தேர்ந்தெடுக்கப்படுவோரில் வெறும் 25 சதவிகிதம் பேர் மட்டுமே பணி நிரந்தர ஆணை பெறுவார்கள். மிச்ச அனைவரும் வீட்டுக்கு திரும்பி விட வேண்டும்.

தேர்வில் கலந்து கொள்வோருக்கான வயது வரம்பு 17லிருந்து 21-க்குள். எனவே 21-லிருந்து 25 வயதுக்குள்ளோர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்ப வந்து விடுவார்கள். புதிய வேலைக்கு முயற்சிக்க வேண்டிய வயதிலும் படிக்க வேண்டிய வயதிலும் உள்ள இளைஞர்கள் அவற்றுக்கான காலத்தில் ராணுவத்தில் இணைந்து விடுவார்கள்.

வேலைப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய வயதில், வேலையை இழப்பார்கள். புதிய வேலை தேட வேண்டியக் கட்டாயத்தில் இருப்பார்கள். புதிய வேலைக்கான படிப்போ திறனோ வளர்த்திருக்க மாட்டார்கள். வேலையில்லாத் திண்டாட்டம் இன்னும் அதிகமாகும்.

என்னப் பிரச்சினைகள்?

நிலையான வேலையின்மையால் ராணுவத்தில் நிலையற்ற தன்மை உருவாகும். ஓய்வூதியம் வெற்றிகரமாக காணாமலடிக்கப்படுகிறது. முக்கியமான பிரச்சினை, ராணுவப் பயிற்சி பெற்று ஊர் திரும்பியிருக்கும் இளைஞர்கள் என்ன செய்வார்கள் என்பதுதான். வேலையின்மை கொடுக்கும் விரக்தியால் அவர்கள் ரவுடிகளாவார்களா, எளிய பணத்துக்காக மக்கள் விரோதிகளாவார்களா அல்லது ஆர்.எஸ்.எஸ்.ஸின் நோக்கத்துக்கு செயல்படுத்தப்படுவார்களா?

எதிர்காலம்?

ராணுவப் பயிற்சி பெற்று வெளியே வருபவர்கள் எளிமையாக militarism ராணுவமயமாக்கப்பட்டு, எந்தவித மனிதாபிமானமுமின்றி அரசுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் இயங்கும் மனநிலையுடன் வெளியே வருவார்கள். நாட்டின் பெரும்பான்மையான இளைஞர்களை எளிமையாக ராணுவமயமாக்கிவிட முடியும். ராணுவமயமாக்கப்படும் இளைஞர்களும் எதேச்சதிகாரமும் இணையும்போது பாசிசம் அதன் முதிர்ச்சியை எட்டி விடும்.

தற்போது அக்னிபாத் திட்டம் தங்களுக்கு நிரந்தர வேலை கொடுக்கப் போவதில்லை என்கிற கோபத்தில் மத்திய மாநில இளைஞர்கள் போராடிக் கொண்டிருந்தாலும் இத்திட்டம் கொண்டிருக்கும் குரூரத்தின் அளவு மிகவும் பெரிது.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பை நிறுவிய ஹெட்கேவரால் 1934ம் ஆண்டு ஒரு மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டின் பொருள் இத்தாலிய பாசிசமும் இந்துக்களின் ராணுவமயமாக்கமும். இந்து மகாசபையின் தலைவரான மூஞ்சே நேரடியாகச் சென்று முசோலினியைச் சந்தித்து வந்தவர். இந்து மதத்தை ஜெர்மனி மற்றும் இத்தாலியின் பாசிச இளைஞர் அமைப்புகளைப் போல் ராணுவமயப்படுத்துவதன் அவசியம் குறித்து தொடர்ந்து பேசினார்.

அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஹெட்கேவர் மற்றும் மூஞ்சேவின் கனவை இந்தியாவில் வளர்த்தெடுக்கப் பார்க்கிறது இந்திய ஒன்றிய அரசு. ராணுவமயப் பாசிசத்தால் இத்தாலிக்கும் ஜெர்மனிக்கும் நன்மை நேர்ந்ததாக வரலாறு இல்லை!

Also Read: “எங்களின் ஒரு துளி கண்ணீரைக்கூட..”: யோகியின் புல்டோசர் ஆட்சியை வெளுத்து வாங்கிய அஃப்ரீன் பாத்திமா!