India
ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு எனக் கூறி ரூ.1.28 கோடி நிதியை வீணடித்த கிரண்பேடி - RTI மூலம் அம்பலம் !
புதுச்சேரி மாநிலத்தின் துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பணியாற்றியபோது, ராஜ்நிவாஸ் பாதுகாப்புக்கு மத்திய பாதுகாப்பு படையை வரவழைத்த காரணத்தால் ரூ.1.28 கோடி அரசின் நிதி வீணடிக்கப்பட்டுள்ளது RTI தகவல் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
புதுச்சேரியில் கடந்த காங்கிரஸ் - தி.மு.க கூட்டணி ஆட்சியில் ஒன்றிய அரசு ஓய்வுபெற்ற போலிஸ் அதிகாரியான கிரண்பேடியை துணைநிலை ஆளுநராக நியமித்து, ஆளும் அரசிற்கு பல்வேறு வகையில் இடையூறுகளை தந்தது. மேலும் காங்கிரஸ் - தி.மு.க அரசிற்கு நற்பெயர் கிடைத்து விடக்கூடாது என்பதற்காக, ஒன்றிய பா.ஜ.க அரசு கிரண்பேடி மூலம் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த விடாமல் தடுத்ததது மட்டுமல்லாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அன்றாட நிகழ்வுகளில் கிரண்பேடியை நேரடியாக ஈடுபடு செய்து, புதுச்சேரி அரசின் நிர்வாகத்தை ஒன்றிய பா.ஜ.க அரசு முற்றிலுமாக முடக்கியது.
இதனிடையே புதுச்சேரி மாநிலத்தில் மக்கள் நலத்திட்டங்களை செயல்படத்த தடையாக இருந்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வலியுறுத்தி, அப்போதைய முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள், தி.மு.க - காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதசார்பற்ற கூட்டணி கட்சி தலைவர்கள் ராஜ்நிவாஸ் எதிரே ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் இந்திய அளவில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டது.
இந்நிலையில் ஆளும் அரசின் போராட்டம் காரணமாக, அப்போதைய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பாதுகாப்பை தீவிரப்படுத்தினார். இதனால் பாதுகாப்பு என்ற பெயரில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படுத்தும் வண்ணம் கடந்த 4.1.2021 முதல் 18.2.2021 வரையிலான 44 நாட்களுக்கு ஆளுநர் மாளிகையை சுற்றி மட்டுமின்றி அதனை ஒட்டியுள்ள பிற சாலைகளிலும் தடுப்புகள் அமைத்ததோடு, ஆர்.ஏ.எப், சி.ஐ.எஸ்.எப் ஆகிய பிரிவுகளின் காவலர்களால் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இந்த பாதுகாப்பு பணிக்கு மட்டும் கோடிக்கணக்கில் செலவிடப்பட்டிருந்தது.
இதுபற்றி தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தகவல்களை பெற்ற ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி கூறியதாவது, ''பாதுகாப்பு பெயரில் 44 நாட்கள் ஆன செலவு பற்றி ஆர்.டி.ஐ மூலம் புதுச்சேரி காவல்துறை தலைமையகத்தில் 11.2.2021 அன்று தகவல்களாக கேட்டதற்கு அவர்கள் தகவல்கள் தரவில்லை. மேல்முறையீடு செய்து புகார் தந்ததற்கு பிறகே தந்தனர்.
அதன்படி, மத்திய சி.ஐ.எஸ்.எப் ஒரு கம்பெனி காவலர்களுக்கு ரூ.28.42 லட்சமும், இவர்களின் போக்குவரத்திற்கு பி.ஆர்.டி.சி பேருந்துக்கு வாடகை ரூ.39.95 லட்சமும், கடற்கரை சாலையில் தடுப்புகள் அமைத்ததற்கு ரூ.2.87 லட்சமும் என்ற தகவல் அளித்திருந்தாலும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ஆர்.ஏ.எப் 2 கம்பெனி காவலர்களுக்கு செலவு செய்த ரசீது இதுவரை அனுப்பவில்லை என தகவலில் கூறினர். இந்த இரண்டு கம்பெனிக்கும் சுமார் ரூ.56.84 லட்சம் செலுத்த வேண்டியிருக்கிறது.
இதன் மூலம் பாதுகாப்பு பணிக்கு மட்டுமே ரூ.1.28 கோடி செலவிடப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. புதுச்சேரியிலேயே இதுபோன்ற பணிக்கு உருவாக்கப்பட்ட ஐ.ஆர்.பி.என் மற்றும் ஆயுதப்படை காவலர்களை பயன்படுத்தாமல், மத்திய பாதுகாப்பு படையினரை அழைக்க வேண்டிய அவசியம் என்ன என்ற கேள்வி எழுகிறது. மத்திய பாதுகாப்பு படையினரை அழைத்து அரசின் நிதி ரூ.1.28 கோடியை வீணடித்துள்ளனர்.
எனவே இந்த போராட்டத்தால் அசாதாரண சூழ்நிலை ஏதும் ஏற்பட வாய்ப்பே இல்லாத போது மத்திய பாதுகாப்பு படையினரை அழைக்க உத்தரவிட்டது யார் என விசாரணை செய்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென மத்திய உள்துறை செயலருக்கு புகார் தந்துள்ளேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!