India
மக்களுடன் மக்களாய் 8 ஆண்டுகள் பதுங்கி இருந்த பயங்கரவாதி.. போலிஸ் எடுத்த ஆக்ஷன் - யார் இந்த தலீப் உசேன்?
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 8 ஆண்டுகள் பதுங்கி இருந்த காஷ்மீர் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு உள்ளார். அவர் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பை சேர்ந்தவர் ஆவார். இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட சதிதிட்டம் தீட்டுபவர்களையும், சிரியாவில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்க்கும் பயங்கரவாதிகளையும் சமீபகாலமாக போலிஸார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் கிஷ்த்வார் மாவட்டத்தை சேர்ந்தவர் தலீப் உசேன். இவர் ஹிஜ்புல் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பின் கமாண்டராக இருந்து வந்தார். மேலும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து பயங்கரவாத அமைப்பிலும் சேர்த்து வந்தார்.
இதனால் தலீப் உசேனை கைது செய்ய கிஷ்த்வார் மாவட்ட ஆயுதப்படை போலிஸார் நடவடிக்கை எடுத்து வந்தனர். ஆனால் அவர் போலிஸாரிடம் சிக்காமல் தலைமறைவாகிவிட்டார். இதனால் தலீப்பை போலிஸார் தீவிரமாக தேடிவந்தனர். மேலும் அவரை பற்றிய தகவலை மற்ற மாநில போலிஸாருக்கும், ஜம்மு காஷ்மீர் போலிஸார் அனுப்பி வைத்து இருந்தனர்.
இந்த நிலையில் தலீப் உசேன் தனது பெயரை தாலீக் உசேன் என்று மாற்றி கொண்டு பெங்களூருவில் வசித்து வருவதாக கிஷ்த்வார் மாவட்ட ஆயுதப்படை போலிஸாாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த மாதம்(மே) 14-ந் தேதி பெங்களூருவுக்கு வந்த ஆயுதப்படை போலிஸார் பெங்களூரு காந்திநகரில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி இருந்தனர்.
மேலும் பெங்களூருவில் உள்ள உயர் போலிஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசிய கிஷ்த்வார் மாவட்ட ஆயுதப்படை போலிஸார் பயங்கரவாதி தலீப் உசேன் பெங்களூருவில் பதுங்கி இருப்பது பற்றியும், அவரை கைது செய்ய உதவும்படியும் கேட்டு கொண்டனர். இதையடுத்து ஆயுதப்படை போலிஸார் கொடுத்த புகைப்படத்தை வைத்து பெங்களூரு போலிஸார் விசாரணை நடத்திய போது தலீப் உசேன் பெங்களூரு ஸ்ரீராமபுரம் எல்லைக்கு உட்பட்ட ஒகலிபுரம் பகுதியில் மசூதியில் உள்ள சிறிய அறையில் தனது மனைவி, 3 குழந்தைகளுடன் வசித்து வந்தது தெரியவந்தது.
இதையடுத்து ஸ்ரீராமபுரம் போலிஸாரை தொடர்பு கொண்டு பேசிய உயர் போலீஸ் அதிகாரிகள் பயங்கரவாதி தலீப் உசேன், ஒகலிபுரத்தில் பதுங்கி இருப்பது பற்றியும், அவரது நடவடிக்கைகளை கண்காணிக்கும்படியும் கூறி இருந்தனர். இதையடுத்து தலீப் உசேனின் நடவடிக்கைகளை போலிஸார் உன்னிப்பாக கவனித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இரவு 10.50 மணியளவில் தான் வசித்து வரும் வீட்டின் முன்பு தலீப் உசேன் நின்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு சென்ற ஆயுதப்படை போலிஸார், ஸ்ரீராமபுரம் போலிஸார் இணைந்து தலீப் உசேனை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை ஆயுதப்படை போலீசார் விசாரணைக்காக ஜம்மு காஷ்மீருக்கு அழைத்து சென்றனர். பயங்கரவாதி தங்களது பகுதியில் பதுங்கி இருந்ததும், அவரை போலீசார் கைது செய்தது பற்றி அறிந்ததும் ஒகலிபுரம் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்த நிலையில் பெங்களூருவில் பதுங்கி இருந்த தலீப் குறித்து ஸ்ரீராமபுரம் போலிஸார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது கடந்த 2006-ம் ஆண்டு தான் ஹிஜ்புல் முஜாகிதீன் அமைப்பில் தலீப் உசேன் சேர்ந்து உள்ளார். ஆனால் அவரது ஆக்ரோஷமான நடவடிக்கை, பயங்கரவாதத்தில் அவருக்கு உள்ள ஆர்வம், இளைஞர்களை மூளைச்சலவை செய்ய அவர் காட்டிய ஆர்வத்தால் அந்த அமைப்பின் கமாண்டராக தலீப் உசேன் நியமிக்கப்பட்டு இருந்தார்.
ஆனால் அந்த அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அந்த அமைப்பில் இருந்து தலீப் உசேன் விலகி விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் தன்னை அந்த அமைப்பினர் கொன்று விடுவார்கள் என்ற பயத்தில் தலீப் உசேன் பெங்களூருவுக்கு தப்பி வந்து உள்ளார். தலீப் உசேனுக்கு திருமணம் முடிந்து மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர். மனைவி, குழந்தைகளை காஷ்மீரில் விட்டுவிட்டு அவர்களிடம் சொல்லி கொள்ளாமல் பெங்களூருவுக்கு வந்து உள்ளார்.
முதலில் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தில் தலீப் வேலை செய்து வந்து உள்ளார். அப்போது ஒரு பெண்ணுடன், தலீப்புக்கு பழக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அந்த பெண்ணின் மூலம் 6 மாதகுழந்தை உள்பட 3 குழந்தைகள் தலீப்புக் பிறந்து உள்ளன. இந்த நிலையில் கொரோனா காரணமாக அவருக்கு வேலை போனதால் தலீப்பும், 2-வது மனைவி, குழந்தைகளும் சாப்பாட்டுக்கு வழியின்றி சிரமப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி அறிந்ததும் ஒகலிபுரம் மசூதியை சேர்ந்தவர் தலீப், அவரது மனைவி, குழந்தைகளுக்கு மசூதியில் உள்ள சிறிய அறையில் தங்க அனுமதி கொடுத்து உணவும் வழங்கி வந்து உள்ளனர். இதற்கிடையே தலீப் தனது பெயரை தாலீக் உசேன் என்று மாற்றியுள்ளார். ஆதார் கார்டிலும் தனது பெயரை தலீப் உசேனில் இருந்து தாலீக் உசேன் என்று மாற்றி இருந்தார். கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக தலீப் பெங்களூருவில் வசித்து வந்து உள்ளார்.
அதிலும் கடந்த 8 மாதமாக தான் ஒகலிபுரம் பகுதியில் வசித்து வந்து உள்ளார். அவர் அமைதியான சுபாவம் உடையவராக இருந்ததால் பயங்கரவாதி என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் அவரிடம் சகஜமாக பழகி உள்ளனர். தற்போது போலிஸார் கைது செய்து இருப்பதால் மக்கள் பீதியில் உள்ளனர். கடலோர, மலை மாவட்டங்களில் சாட்டிலைட் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ள நிலையில், பெங்களூருவில் பயங்கரவாதி கைது செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பயங்கரவாதி போல நடந்து கொள்ளவில்லை
தலீப் உசேனுக்கு தங்க இடம் கொடுத்த மசூதியின் தலைவர் கூறும்போது, தலீப் உசேன் எங்களிடம் அவரது பெயரை தாலீக் உசேன் என்று தான் கூறி இருந்தார். ஆதார் கார்டிலும் தாலீக் உசேன் என்று தான் பெயர் இருந்தது. அவர் பெங்களூருவுக்கு வந்த 8 ஆண்டுகள் ஆகிவிட்டது. அவர் பல்வேறு பகுதிகளில் வசித்து உள்ளார். கடந்த 8 மாதத்திற்கு முன்பு தான் ஒகலிபுரத்திற்கு வந்து மனைவி, 2 குழந்தைகளுடன் தங்கி இருந்தார். கொரோனா 2-வது அலையின் போது வேலை போனதால் சாப்பிட உணவின்றி மனைவி, 3 குழந்தைகளுடன் கஷ்டப்பட்டதால் மனிதாபிமான அடிப்படையில் மசூதியில் தங்கி கொள்ள அனுமதி கொடுத்தோம். ஆனால் இங்கு தங்கி இருந்த போது அவர் ஒருபோதும் பயங்கரவாதி போல நடந்து கொள்ளவில்லை. இதனால் அவர் மீது எங்களுக் சந்தேகம் வரவில்லை என்று கூறினார்.
ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்த முதல் மனைவி
பயங்கரவாத அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தலீப் உசேன் அந்த அமைப்பில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது. ஆனால் பயங்கரவாத அமைப்பின் சதிதிட்டம் பற்றி தலீப்புக்கு தெரியும் என்பதால் அவரை கொலை செய்ய பயங்கரவாத அமைப்பினர் திட்டமிட்டு இருந்ததாக தெரிகிறது. இதனால் உயிருக்கு பயந்து தலீப் பெங்களூருவுக்கு தப்பி வந்து உள்ளார்.
ஆனால் அவரை பற்றி தகவல் இல்லாததால் முதல் மனைவி, தலீப்பை கண்டுபிடித்து தரும்படி ஜம்மு காஷ்மீர் மாநில ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து இருந்தார். அந்த மனுவை விசாரித்த கோர்ட்டு, தலீப்பை கண்டுபிடிக்க வேண்டும் என்றும் போலீசாருக்கு உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. தலீப்பை போலீசார் கைது செய்த போதும் மசூதியின் தலைவரிடம் ஆட்கொணர்வு மனு சம்பந்தமாக அழைத்து செல்வதாக கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!