India

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாய சங்க தலைவர் மீது கருப்பு மை வீசி தாக்குதல் : பின்னணி என்ன?

ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியிலும், உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானாவிலும் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர் பாரதிய கிசான் சங்கத் தலைவர் ராகேஷ் திகாயத்.

விவசாய சங்கத் தலைவர் என்ற போர்வையில் இவர் முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக புகார் எழுந்தது. பணம் கேட்டு இவர் பேசிய தொலைபேசி ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இதற்கு விளக்கம் அளிப்பதற்காக பெங்களூருவில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இவர் கலந்து கொண்டார். அப்போது, ஒரு சிலர் அவர் முகத்தின் மீது கருப்பு மை வீசினர். இதனால், அங்கிருந்த இரு தரப்பினரக்கு இடையே மோதல் ஏற்பட்டு, பிளாஸ்டிக் நாற்காலிகளை ஒருவர் மீது ஒருவர் வீசிக் கொண்டனர். இதையடுத்து மூன்று பேரை பிடித்து போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய ராகேஷ் திகாயத், போதிய போலிஸ் பாதுகாப்பு வழங்கப்படாததை சுட்டிக்காட்டி, மாநிலத்தில் ஆட்சி செய்யும் பா.ஜ.க-வின் சதியே இதற்குக் காரணம் என குற்றம் சாட்டினார். உத்தரப்பிரதேசத்தின் முசாபர்நகரில் உள்ள காக்டா கிராமத்தில் நடைபெற்ற விவசாயிகள் சங்க பொதுக்கூட்டத்தில் நேற்று உரையாற்றிய ராகேஷ் திகாயத், பா.ஜ.க அரசுக்கு எதிராக கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.

மேலும், பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் இருந்து வைக்கோல் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டால் விவசாயிகள் தங்கள் கால்நடைகளை காவல்நிலையங்களில் கட்டுவார்கள் என அவர் எச்சரித்தார். இந்நிலையில், அவர் மீது கருப்பு மை வீசப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: “சாதி பற்றிய புரிதலை எவரும் இதுவரை தந்ததில்லை.. ‘நெஞ்சுக்கு நீதி’ வெல்லட்டும்” : ஆ.ராசா எம்.பி பாராட்டு!