India

“4 ஆண்டுகளில் சிறுக சிறுக சேமித்த 90 ஆயிரம்” : அன்பு மனைவிக்காக யாசகர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

மத்திய பிரதேச மாநிலம், அமர்வாரா கிராமத்தைச் சேர்ந்தவர் சாஹு. இவருக்குப் பிறவியிலிருந்தே இரண்டு கால்களும் செயலிழந்ததால், தனது கிராமத்திலேயே பல ஆண்டுகளாக யாசகம் பெற்று வருகிறார். இவர் யாசகம் பெறுவதற்கு அவரது மனைவி முன்னி உதவியாக இருந்து வருகிறார்.

தனது கணவரை மூன்று சக்கர சைக்கிளில் அமரவைத்து, பிறகு அந்த வண்டியைத் தள்ளிக் கொண்டு தம்பதிகள் இருவரும் யாசகம் பெற்று வந்துள்ளனர். இந்நிலையில், திடீரென முன்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரால் வண்டியைத் தள்ளுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் தனது கணவருக்காக வண்டியைத் தள்ளிக் கொண்டு வந்துள்ளார்.

இதை கவனித்த சாஹு மனைவிக்குத் தெரியாமல் யாசகமாகத்தில் கிடைக்கும் பணத்தில், சிறு தொகையை எடுத்து, சிறுக சிறுக சேகரித்து வந்துள்ளார். இப்படி கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் ரூ.90 ஆயிரம் சேமித்துள்ளார். இதையடுத்து அந்த பணத்தைக் கொண்டு புதிதாக மூன்று சக்கர மோட்டார் வாகனத்தை வாங்கி அதைத் தனது மனைவி முன்னிக்கு பரிசாக வழங்கியுள்ளார்.

இதையடுத்து இந்த தம்பதிகள் இந்த புதிய மோட்டார் வண்டியில் ஏறி யாசகம் பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அக்கிராம மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் யாசகம் பெற்றாலும் தனது மனைவியின் நிலையை உணர்ந்து நடந்து கொண்ட சாஹுபலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தம்பதிகள் புதிய மோட்டார் வண்டியில் ஏறிச் செல்லும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read: நடுவானில் நின்ற ரோப்கார்.. அந்தரத்தில் தொங்கிய 40 பேர் : நெஞ்சை பதறவைக்கும் வீடியோ காட்சி !