India

‘இப்படி ஒரு பெரட்டு.. அப்படி ஒரு பெரட்டு..’ : தேச துரோக சட்ட விவகாரம் பற்றி ஒன்றிய அரசு திடீர் பல்டி!

ஒருவரை ஒடுக்கும் நோக்கில் போடப்படும் தேச விரோத வழக்குகளால் சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் அதனை நீக்க வேண்டும் என எடிட்டர்ஸ் கில்டு உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் தரப்பில் இருந்து நோட்டீஸ் அனுப்பி பத்து மாதங்கள் ஆகியும் ஒன்றிய அரசு எந்த பதில் மனுவும் தாக்கல் செய்யாமல் வாய்தா மட்டுமே வாங்கி வந்தது.

இந்த நிலையில், இதற்கு மேல் அவகாசம் வழங்க முடியாது என்று கூறிய உச்ச நீதிமன்றம் கடந்த மே 6ம் தேதி விசாரணையை தொடங்கியது. இதனையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், “தேச விரோத சட்டம் மிக நல்ல சட்டம். அரசியல் சாசனத்தை சமநிலையில் அணுகும் சட்டம். 60 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் அதனை மறு ஆய்வு செய்ய தேவையில்லை.

சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக சட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்ற வாதத்தை ஏற்க கூடாது என்று குறிப்பிட்டுள்ளது.

இதனை அடுத்து வழக்கு தொடர்பான விசாரணை இன்று (மே 9) மீண்டும் நடைபெறும் எனக் குறிப்பிட்டுள்ளது தலைமை நீதிபதி ரமணா தலைமையிலான அமர்வு.

இந்த நிலையில் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, தேசவிரோத சட்டத்தின் 124A பிரிவை நீக்குவது குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளதாக ஒன்றிய அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று புதிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது. அதுவரை வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது.

Also Read: ஆசிரியர்களுக்கான தண்ணீரை குடித்த தலித் மாணவி: சாதி ரீதியில் பேசி தாக்கிய ஆசிரியர்; உ.பியில் நடந்த கொடூரம்