India

“LIC பொதுப் பங்கு வெளியீடு தொடக்கம்” : 31.62 லட்சம் கோடி பங்கை தனியாருக்கு தாரை வார்க்கும் மோடி அரசு !

நாட்டின் பொதுத்துறை நிறுவனங்களை பெரு முதலாளிகளுக்கு தாரைவார்க்கும் வகையில், அரசு நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பது, ஒட்டுமொத்தமாக தனியார் வசம் ஒப்படைப்பது என பல்வேறு வகையில் தனியார்மயமாக்கலை ஊக்குவித்து வருகிறது மோடி அரசு.

குறிப்பாக, பொதுத்துறை நிறுவனத்தின் பங்குகளை விற்பதன் மூலமாக 2.1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப் போவதாக ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லி இருக்கிறார். அரசுக்கு இருக்கும் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை தங்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

அதுமட்டுமா முன்பெல்லாம் கஷ்டம் என்று சொல்லி விற்பார்கள் ஆனால் தற்போது லாபம் பார்ப்பதற்காக விற்கிறோம் என்று மாற்றிச் சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். இதன் தொடக்கமாக கடந்த 2021 பிப்ரவரி 1 ஆம் நாள் ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரசிடம் உள்ள எல்.ஐ.சி.யின் 100 சதவிகிதப் பங்குகளின் ஒரு பகுதியை தனியாருக்கு விற்கப் போவதாக அறிவித்தார்.

அதோடு அல்லாமல், இதற்கான பொதுக்காப்பீட்டுத் திட்ட மசோதாவை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 2 அன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றியது ஒன்றிய பா.ஜ.க அரசு. மேலும் எல்.ஐ.சி பங்குகளை விற்பதற்கு இந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி கொடுத்துவிட்டது.

அதன்படி, தற்போது 632 கோடியே 49 லட்சத்து 97 ஆயிரத்து 701 பங்குகள் ஒன்றிய அரசிடம் உள்ளன. இதில் 4.99 சதவிகிதத்தை அதாவது 31 கோடியே 62 லட்சத்து 49 ஆயிரத்து 885 பங்குகள் தனியாருக்கு விற்கப்போவதாக அரசு அறிவித்திருக்கிறது. இதன் மூலமாக 62 ஆயிரம் கோடி ரூபாய் பணம் திரட்டலாம் என்று கணக்கிட்டுள்ளார்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை அவ்வளவு பணம் கிடைத்தாலும், அந்தப் பணம் எல்.ஐ.சி.க்கு வராது. ஒன்றிய அரசுக்குத்தான் போகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், எல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுப் பங்கு வெளியீடு இன்று தொடங்கியது. இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், 50% நிறுவன முதலீட்டாளர்களுக்கும், 35% சில்லறை முதலீட்டாளர்களுக்கும் 10% எல்.ஐ.சி பாலிசிதாரர்களுக்கும் ஒதுக்கப்படுகிறது. எல்.ஐ.சி அதன் பாலிசிதாரர்களுக்கு ரூ.60 தள்ளுபடியும், அதன் ஊழியர்கள் மற்றும் சில்லறை முதலீட்டாளர்களுக்கு ரூ.40 தள்ளுபடியும் வழங்குகிறது.

ஒவ்வொரு பங்கும் ரூ.10 முகமதிப்பு கொண்டிருக்கும். மொத்தம் 31.62 கோடி பங்குகள் விற்பனை செய்யப்படும். இதில் ஊழியர்களுக்கு 5 சதவீதமும், தனிநபர் காப்பீடுதாரர்களுக்கு 10 சதவீதமும் ஒதுக்கீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. செபியிடம் சமர்ப்பித்த அறிக்கையின்படி மே 12-ம் தேதிக்குள் எல்ஐசி பங்கு விற்பனையை தொடங்க வேண்டும். இதனால் பொதுபங்கு வெளியீடு மே 4-ம் தேதி தொடங்கி மே.9 தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி எல்.ஐ.சியின் ஆரம்ப பொது பங்கு வெளியீடு மே 4-ம் தேதியான இன்று தொடங்கியது. ரூ.902-949 விலையில் பங்கு வெளியிடப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே மிகப்பெரிய ஐ.பி.ஓ-வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்கப்படும் நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எல்.ஐ.சி ஊழியர்கள் மட்டுமல்ல எல்.ஐ.சி முகவர்கள், எல்.ஐ.சி-யில் காப்பீடு எடுத்துள்ள நுகர்வோர் என பலர் ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தென் மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பு நிர்வாகி கூறுகையில், “எல்.ஐ.சி 1956ல் தொடங்கப்பட்ட போது 5 கோடி ரூபாய் மூலதனத்துடன் இருந்தது. ஆனால் தற்போது 32 லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்புக்களைக் கொண்டு நஷ்டம் அடையாமல் இயங்கிவருகிறது.

ஏன் கடந்தாண்டு ஒன்றிய அரசுக்கே 2 ஆயிரத்து 611 கோடி ரூபாயை ஈவுத் தொகையாக எல்.ஐ.சி தான் வழங்கியது. குறிப்பாக ஜி.எஸ்.டி வசூல், மறைமுக வரிவசூல் போன்றவற்றில் நிர்ணயித்த இலக்கை மத்திய அரசு எட்ட முடியாத நிலையில், அரசு நிர்ணயிக்கும் இலக்கையும் தாண்டி அனைத்து சேவைகளையும் எல்.ஐ.சி வழங்கி வருகிறது. அத்தகைய நிறுவனத்தை தனியாருக்கு கொடுப்பது ஏன்?

அதுமட்டுமின்றி, அமெரிக்காவின் ஏ.ஐ.ஜி, ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி போன்ற நிறுவனங்கள் 10 ஆண்டுகள் கூட இந்தியாவில் நிலைக்க முடியாத நிலையில், 63 வருடங்களாக தேச வளர்ச்சிக்கு எல்.ஐ.சி சேவையாற்றுகிறது. இந்நிலையில் லாபகரமான எல்.ஐ.சி நிறுவனத்தை தனியாருக்கு கூறுபோடுகிறது” என ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

Also Read: LIC பங்கை தனியாருக்கு விற்பதா? என்ன நியாயம் இது? - பொங்கும் தென் மண்டல ஊழியர் சங்கம்: ஸ்ட்ரைக் அறிவிப்பு!