India
இஸ்லாமிய மக்களை அச்சுறுத்த.. பா.ஜ.க கையில் எடுத்துள்ள ‘புல்டோசர்’ ஆயுதம்!
மத்தியில் மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டுள்ளது.
இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில்தான் மத மோதல்கள் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது பா.ஜ.க இல்லாத மாநிலங்களிலும் மத மோதல்கள் மோதல்கள் ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம் ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலங்களே. இந்த ஊர்வலங்களில் தான் இந்தியாவின் பல்வேறு இடங்களில் மத மோதல்கள் நடைபெற்றுள்ளன. இந்துத்துவ கும்பலைச் சேர்ந்தவர்கள் வேண்டும் என்ற இஸ்லாமியர் பகுதிக்குச் சென்று முழக்கங்களை எழுப்பி அங்கு வன்முறையை ஏற்படுத்தியுள்ளனர்.
அண்மையில் கூட ராஜஸ்தானில் கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி கரொளி பகுதியில் வன்முறை வெடித்தது. இதில் அங்கிருந்த இஸ்லாமியக் கடைகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
இதையடுத்து மத்திய பிரதேச மாநிலம், கர்கோன் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி ராம நவமி ஊர்வலத்தில் வன்முறை ஏற்பட்டது. இதிலும் இஸ்லாமிய வீடுகள், கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வன்முறை குறித்து உரிய விசாரணை நடத்தாமல் அப்பகுதியில் இருந்த இஸ்லாமியர்களின் வீடுகள் மற்றும் கடைகளை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை எனக் கூறி பா.ஜ.க அரசு இடித்து தரைமட்டமாக்கியது.
தற்போது டெல்லியில் நடந்த வன்முறையிலும் இதே ஆயுதத்தைக் கையில் எடுத்து அங்கிருந்து இஸ்லாமியர் வீடுகளை புல்டோசர்களை கொண்டு இடித்துள்ளது. அதுவும் உச்சநீதிமன்றம் வீடுகளை இடிக்கத் தடை விதித்தும், அந்த உத்தரவை மதிக்காமல் டெல்லி மாநகராட்சி செயல்பட்டுள்ளது.
பா.ஜ.க அரசின் இந்த கொடூரத்தைக் கண்டு பொங்கி எழுந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் நேரடியாக ஜஹாங்கிர்புரி பகுதிக்குச் சென்று வீடுகளை இடித்த புல்டோசர்கள் முன்பு நின்று தனியொரு ஆளாக, வீடுகள் இடிப்பதை தடுத்து நிறுத்தினார். மேலும் இஸ்லாமிய மக்களுக்கு எதிராக பா.ஜ.க அரசின் திட்டமிட்ட நடவடிக்கைகள் என எதிர்க்கட்சிகள் கடுமையாகக் குற்றம்சாட்டி வருகின்றன.
இப்படி ராம நவமி, அனுமன் ஜெயந்தி ஊர்வலம் என்ற பெயரில் இந்தியா முழுவதும் வன்முறையை ஏற்படுத்த பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. இதனால்தான், காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட 13 எதிர்க்கட்சி தலைவர்கள், நாட்டை மத ரீதியாக பிரித்தாள மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளை முறியடிக்க மக்கள் அமைதி காக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் ஐந்து மாநில தேர்தல் பிரச்சாரத்தின்போது பா.ஜ.கவின் வலுவான புல்டோசர்தான் இந்தியாவை காக்கும் என கூவிக் கூவி அக்கட்சியின் தலைவர்கள் பேசினர். ஆனால் இப்போதுதான் தெரிகிறது இந்த புல்டோசர் இந்தியாவை காக்க அல்ல அழிக்க வந்துள்ளது என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
”அதிமுக ஆட்சியில் போர்டு வைத்ததுபோல் அல்ல” : பழனிசாமிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
-
தென்னிந்தியாவிலேயே முதன்முறை : ரூ. 18.18 கோடி செலவில் துல்லிய பொறியியல் தொழில்நுட்ப மையம்!
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!