India

“குஜராத் மாடலா?.. வெள்ளைத்துணி மாடலா?” : சர்வதேச தலைவர்களை ஏமாற்ற பா.ஜ.க அரசின் மாய்மாலங்கள்!

இந்தியா வரும் சர்வதேச தலைவர்களின் பார்வையில் குடிசைப் பகுதிகள் படாமல் மறைப்பதற்காக சுவர்கள் எழுப்புவதும் திரை கொண்டு மறைப்பதும் குஜராத் மாநில பா.ஜ.க அரசுக்கு வாடிக்கையாகிவிட்டது.

முன்னதாக, முன்னாள் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வருகைக்காக, குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்துக்கு அருகே இருக்கும் குடிசைவாரிய குடியிருப்பு பகுதிகளை சுவர்களை எழுப்பி மறைத்தனர்.

கடந்தாண்டு தனது சொந்த மாநிலமான குஜராத்திற்கு மோடி சென்றபோது நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வரும் மக்கள் அங்குள்ள குடிசைகளை பார்த்து முகம் சுழித்துவிடக்கூடாது என்பதற்காக, குஜராத் அரசு இரும்புத்திரை, துணிகளை வைத்து குடிசைகளை மறைத்தது.

இந்நிலையில், இந்தியா - பிரிட்டன் இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், 2 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். லண்டனில் இருந்து தனி விமானம் மூலம் குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்திற்கு நேற்று அவர் வந்தார்.

இந்தியா வந்த பிரிட்டன் பிரதமரை குஜராத் ஆளுநர் ஆச்சாரியா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர பட்டேல் ஆகியோர் வரவேற்றனர். குஜராத்துக்கு பிரிட்டன் பிரதமர் ஒருவர் வருகை தருவது இதுவே முதல்முறை.

குஜராத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சன் பயணம் மேற்கொண்டபோது, சாலையின் இருபுறமும் வெள்ளைத் துணிகளைக் கொண்டு குடிசை பகுதிகள் மறைக்கப்பட்டன.

இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. வளர்ச்சி என்ற பெயரில் முன்வைக்கப்படும் ‘குஜராத் மாடல்’ இதுதானா என சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

Also Read: “இது அப்பட்டமான ‘Copy Paste’ பட்ஜெட்” : பா.ஜ.கவின் ‘குஜராத் மாடல்’ வெற்று பிம்பத்தை உடைத்த ஹர்திக் படேல்!