India

‘ராம நவமி’ ஊர்வலம் என்ற பெயரில் வட மாநிலங்களில் மதக் கலவரம்.. இஸ்லாமியர்களின் வீடுகளை சூறையாடிய கும்பல்!

பா.ஜ.க ஆட்சியில் சங்-பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் முஸ்லிம் மக்கள் மீது தொடர் வன்முறையை அரங்கேற்றி வருகின்றனர். இந்நிலையில், ‘ராம நவமி’ ஊர்வலம் என்ற பெயரில், டெல்லி, குஜராத், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களில் சங்-பரிவார் மற்றும் இந்துத்வா கும்பல்கள்கள், இஸ்லாமியருக்கு எதிராக வன்முறையில் இறங்கினர். இஸ்லாமியர்களின் உடமைகளை தீவைத்தனர்.

அந்த வகையில், பீகார் மாநி லம் முசாபர்பூரிலுள்ள மசூதியின் கோபுரத்தில் அவர்கள் காவிக்கொடியையும் ஏற்றியுள்ளனர். வீடுகள், கடைகளை தீவைத்து எரித்தனர். இந்தச் சம்பவங்களில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததுடன், 2 பேர் உயிரிழந்தனர்.

குறிப்பாக, ம.பி. மாநிலம் தலாப் சவுக், கவுசாலா மார்க், தபாடி சவுக், சஞ்சய் நகர் மற்றும் மோட்டிபுரா பகுதிகளில் ஏழை முஸ்லிம்களின் வீடுகள், கடைகள் தீவைத்து எரிக்கப்பட்டன. போலிஸ் வாகனம் ஒன்றும் எரித்து சம்பலாக்கப்பட்டது. இந்தச் சம்பவத்தில் கார்கோன் மாவட்ட எஸ்.பி சித்தார்த் சவுத்ரியின் கால் களில் காயம் ஏற்பட்டது.

சீருடையில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், இங்குள்ள பிலால் மசூதியின் நுழைவாயிலை உடைத்து, அங்கிருந்த மூதாட்டி ஒரு வரையும் கடுமையாகத் தாக்கினர். இதனிடையே, ம.பி. மாநில காவல்துறையானது, சங்-பரிவாரங்களை விட்டுவிட்டு, பாதிக்கப்பட்ட முஸ்லிம்களையே தற்போது 70 பேர் வரை கைது செய்திருப்பதுடன், கார்கோன் மாவட்ட நிர்வாகம் ராம நவமிக்கு மறுநாள் முஸ்லிம்களின் வீடு, கடைகளை இடித்துத் தரை மட்டம் ஆக்கியுள்ளது.

இதுகுறித்து கார்கோன் மாவட்ட ஆட்சியர் அனுகிரகா பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில், “கடைகள், வீடுகள் இடிப்பு என்பது இந்து முஸ்லிம் கலவரத்தின் தொடர்ச்சி அல்ல. ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள மக்களின் வீடுகளையும் கடைகளையுமே இடித்துள்ளோம். 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை இடித்துள்ளோம். ஆக்கிரமித்து கட்டப்பட்ட இடங்களை காலி செய்யும்படி சட்டபடி நேரம் கொடுத்தும் அவர்கள் காலி செய்யவில்லை. அதனால் இடிக்க வேண்டியதாகிவிட்டது. இந்த நடவடிக்கைக்கும் ராம நவமி கலவரத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று அவர் சமாளித்துள்ளார். ஆனாலும் ஆட்சியரின் இந்த பதிலை பலரும் ஏற்க மறுத்து குற்றம்சாட்டி வருகின்றனர்.

Also Read: “தமிழ்நாட்டில் போலி சான்றிதழ் மூலம் அரசுப் பணியில் சேர்ந்த வடமாநிலத்தவர்கள்” - விசாரணையில் ‘பகீர்’ தகவல்!