India

“இதெல்லாம் என்னங்க பிரதமர் அவர்களே...” : வாரிசு அரசியலை எதிர்ப்பது இப்படித்தானா?

‘ஜனநாயகத்துக்கு மிகப்பெரிய எதிரி வாரிசு அரசியல்தான்’ என்று பிரதமர் மோடி பேசியுள்ள நிலையில், பா.ஜ.கவின் வாரிசு அரசியல் மக்களிடையே கேள்வியாக எழுந்துள்ளது.

பா.ஜ.க நிறுவியதன் 42ஆவது ஆண்டு விழா கடந்த வாரம் டெல்லியில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் மோடி, ‘வாரிசு அரசியலை பா.ஜ.க. மட்டுமே எதிர்க்கிறது' என்று பேசியுள்ளார்.

ஆனால், பிரதமர் மோடியின் அரசில், மாநிலங்களவை, மக்களவையில் எம்.பி-க்களாக இருக்கும் பா.ஜ.க-வினரில், 11 சதவிகிதம் பேர் வாரிசு அரசியல்வாதிகள்தான்.

பா.ஜ.கவில், அமைச்சர்களாகவும், எம்.பி, எம்.எல்.ஏக்களாகவும் பதவி வகிக்கும் வாரிசு அரசியல்வாதிகள் சிலரது பட்டியல் இங்கே..

வேத்பிரகாஷ் கோயல், ஒன்றிய அமைச்சராக இருந்தார். அவரது மனைவி சந்திரகாந்த் கோயல், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். இவர்களது மகன்தான் இன்றைய ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் ஆவார்!

* தேபேந்திர பிரதான், முன்பு ஒன்றிய அமைச்சராக இருந்தார். இவரது மகன்தான் இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கும் தர்மேந்திர பிரதான்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் மாதவராவ் சிந்தியாவின் மகனான ஜோதிராதியத்ய சிந்தியா, இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

* கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்த எஸ்.ஆர்.பொம்மை அவர்களின் மகன்தான் இன்று கர்நாடக முதலமைச்சராக இருக்கும் பசவராஜ் பொம்மை.

* இமாசலப் பிரதேசத்தின் முதலமைச்சராக இருந்தவர் பிரேம்குமார் துமால். இவரது மகனான அனுராக் தாகூர், இன்று ஒன்றிய அமைச்சராக இருக்கிறார்.

* கைலாஷ் விஜய்வர்க்கியா என்பவர் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளராக இருந்தார். அவரது மகன்தான் இன்று மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஆகாஷ் விஜய் வர்க்கியா.

* மத்திய பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக இருந்த வீரேந்திர சக்லேச்சாவின் மகன் ஓம் பிரகாஷ் சக்லேச்சா இன்று மத்திய பிரதேசத்தின் அமைச்சராக இருக்கிறார்.

* ராஜஸ்தான் மாநில முன்னாள் முதலமைச்சரான வசுந்தரா ராஜேவின் மகன் துஷ்யந்த் சிங், இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பி.ஒய்.ராகவேந்திரா, இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* மேனகா காந்தி மகன் வருண் காந்தி நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் சிசிர் அதிகாரியின் மகன்தான் இன்று மேற்கு வங்க மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் பிரமோத் மகாஜனின் மகள் பூனம் மகாஜன் இன்று நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் கல்யாண் சிங்கின் மகன் ராஜ்வீர் சிங், நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* ஒன்றிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மகன் பங்கஜ் சிங், உ.பி. மாநில எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் கோபிநாத் முண்டேவின் மகள் ப்ரீத்தம் முண்டே, நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறார்.

* முன்னாள் ஒன்றிய அமைச்சர் சி.பி.தாகூரின் மகன் விவேக் தாகூர் மாநிலங்களவை உறுப்பினராக இருக்கிறார்.

இதுதான் பா.ஜ.க.வின் வாரிசு அரசியல். இவர்களைத்தான் மோடி எதிர்க்கிறாரா எனக் கேள்வி எழுந்துள்ளது.

Also Read: “ரத்தவாரிசு மட்டுமல்ல,கொள்கை கோட்பாடுகளுக்கும் மொழி இனத்துக்குமான வாரிசு முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி