India

நீரவ் மோடியின் கூட்டாளி கைது.. எகிப்தில் தலைமறைவானவரை 4 ஆண்டுகளுக்குப் பிறகு மும்பை கொண்டுவந்த CBI !

எகிப்தில் தலைமறைவாக இருந்த வைர வியாபாரி நீரவ் மோடியின் கூட்டாளி சுபாஷ் சங்கரை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்து மும்பை அழைத்து வந்தனர்.

கடந்த 2018ஆம் ஆண்டு மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில், பிரபல வைர வியாபாரி நீரவ் மோடி ரூ13,578 கோடி அளவுக்கு கடன் பெற்றுவிட்டு, அதை திருப்பிச் செலுத்தமால் வெளிநாட்டிற்குத் தப்பியது அம்பலமானது.

இதுதொடர்பாக சி.பி.ஐ அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். நீரவ் மோடி லண்டனில் கடந்த 2019ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் வங்கி மோசடியில் தொடர்பு உள்ளதாக நீரவ் மோடியின் நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்த சுபாஷ் சங்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டவுடன் அவர் தலைமறைவானார். அவர் எகிப்த் தலைநகர் கெய்ரோ அருகே தலைமறைவானது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து, அவரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், அவரை சி.பி.ஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். இன்று, சுபாஷ் சங்கரை அதிகாரிகள் மும்பை அழைத்து வந்தனர்.

நீரவ் மோடியின் பெரும்பாலான பணப் பரிவர்த்தனைகளை, சுபாஷ் சங்கர் செய்து வந்தது தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும், அதிகாரிகள் தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

2018ஆம் ஆண்டில் எகிப்துக்கு தப்பிச் சென்ற இவர் 4 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளதால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read: 'தேடப்படும் குற்றவாளி’ நீரவ் மோடியின் 2400 கோடி சொத்துகள் ஏலம் ? - அடுத்த நடவடிக்கை என்ன ?