India

‘துன்புறுத்தாதீர்கள்’.. கடிதம் எழுதி வைத்துவிட்டு பெண் மருத்துவர் தற்கொலை - சிக்கிய பாஜக நிர்வாகி !

ராஜஸ்தான் மாநிலம், தவுசா மாவட்டம் லால்சோட் பகுதியைச் சேர்ந்தவர் மருத்துவர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து அதே பகுதியில் மருத்துவமனை நடத்தி வந்தார். அர்ச்சனா மகப்பேறு மருத்துவராக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், அர்ச்சனா நடத்தும் மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஒருவர், அதிக ரத்தப்போக்கு காரணமாக பிரசவத்தின்போது உயிரிழந்துள்ளார். ஆனால், மருத்துவரின் தவறான சிகிச்சை காரணமாகவே கர்ப்பிணி உயிரிழந்ததாகவும், மருத்துவர் அர்ச்சனாவை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உறவினர்கள் போராட் டம் நடத்தினர்.

இதையடுத்து மருத்துவர் அர்ச்சனா மீது லால்சோட் காவல் நிலையத்தில் சட்டப்பிரிவு 302-இன் கொலை வழக்குப்பதிவு செய்தனர். இதனால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளான மருத்துவர் அர்ச்சனா மருத்துவமனையின் மேல்மாடியில் உள்ள தனது வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 29) அன்று தற்கொலை செய்து கொண்டார்.

அப்போது, “என் கணவர் மற்றும் குழந்தைகளை மிகவும் நேசிக்கிறேன். தயவு செய்து என் மரணத்திற்கு பிறகு என் கணவர் மற்றும் குழந்தைகளை தொந்தரவு செய்யாதீர்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை, யாரையும் கொலை செய்யவில்லை. என் மரணம் நான் குற்றமற்றவள் என்பதை நிரூபிக்கலாம். அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்” என்று கடிதம் ஒன்றையும் மருத்துவர் அர்ச்சனா எழுதி யிருந்தார்.

இதனிடையே உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராடிய தற்கும், மருத்துவமனைக்கும், மருத்துவர்களுக்கும் பெரும் அழுத்தத்தைக் கொடுத்ததற்கும், ராஜஸ்தான் மாநில முன்னாள் அமைச்சரும், பா.ஜ.க மூத்தத் தலைவருமான ஜிதேந்திர கோத்வால்-தான் காரணம் என்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பா.ஜ.க தலைவர் ஜிதேந்திர கோத்வால் மீது சட்டப் பிரிவு 306-இன் கீழ் (தற்கொலைக்கு தூண்டுதல்) வழக்குப்பதிவு செய்து போலிஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

Also Read: அமெரிக்காவின் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை ரத்து.. காரணம் என்ன? #5in1_World