கோப்புப் படம்

India

உக்ரைன் - ரஷ்யா போர்; அமெரிக்காவின் பொருளாதார தடை.. இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி: பின்னணி என்ன?

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு 77 ரூபாய் என்ற அளவிற்கு இறங்கியுள்ளது. இது வரும் வாரங்களில் 80 ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி அடைய வாய்ப்புள்ளதாக தரமதிப்பீட்டு நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளுக்குப் பயந்து, ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இறக்குமதியைக் குறைக்கும் நடவடிக்கையில் உலக நாடுகள் இறங்கினால், குறிப்பாக, ரஷ்யா - ஜெர்மனி எரிவாயு குழாய் மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்றுக்கு 300 டாலருக்கும் அதிகமாகிவிடும் என கூறப்படுகிறது.

அதற்கேற்பவே முன்பேர வர்த்தகத்தில் 118 டாலர், 125 டாலர் என கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகிறது. ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்கு மதிக்கு தடை விதிப்பது பற்றி, அமெரிக்காவும், ஐரோப்பிய கூட்டணி நாடுகளும் ஆலோசனை நடத்தியதற்கே, கடந்த வாரம் கச்சா எண்ணெய் விலை 14 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்தது.

இந்நிலையில், இதுதொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குநர் கீதா கோபிநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இந்தியா உட்பட உலகளவில் பல்வேறு நாடுகளின் பொருளாதாரத்தை, உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் பாதித்துள்ளது. இந்தியா தனது தேவையில் பெரும்பகுதியை இறக்குமதி செய்தே பயன்படுத்துவதால், அதிகரித்து வரும் விலைவாசி இந்திய குடும்பங்களின் வாங்கும் திறனை பாதித்துள்ளது.

ஏற்கனவே இந்தியாவின் பணவீக்கம் 6 சதவிகிதத்தை தொடும் நிலையில் உள்ளது. இது ரிசர்வ் வங்கியின் இலக்குக்கு மேலாக உள்ளது. எனவே அதிகரித்து வரும் விலைவாசி என்பது மேற்கொண்டு பணவீக்கத்தினை ஊக்குவிக்கக் கூடும்” என்று எச்சரித்துள்ளார்.

அதேபோல், சர்வதேச நாணய நிதிய மேலாண் இயக்குநர் கிறிஸ்ட லினா ஜார்ஜியா வெளியிட்டுள்ள பதிவில், “டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 76 ரூபாய் 43 காசுகளாக வீழ்ச்சி அடைந்துள்ளது. சா்வதேச சந்தையில் வியாழக்கிழமை நடைபெற்ற முன்பேர வா்த்தகத்தில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 116. 43 டாலருக்கு வா்த்தகமானது. எனவே, கச்சா எண்ணெய் விலை உயர்வு இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Also Read: உக்ரைன் - ரஷ்யா போர்.. சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு: இந்திய மக்களின் வயிற்றில் அடிக்கும் அமெரிக்கா !