India

உக்ரைன் - ரஷ்யா போர்.. சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு: இந்திய மக்களின் வயிற்றில் அடிக்கும் அமெரிக்கா !

உக்ரைன் - ரஷ்யா இடையே மோதலை காரணமாக வைத்து, ரஷ்யாவுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது. அதன்விளைவாக, உலகளவில் பொருளாதார நடவடிக்கைகளில் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தி அத்தியாவசியப் பொருட்களின் விலையிலும் உயர்வை ஏற்படுத்தியுள்ளது.

அதனொரு பகுதியாக, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் சமையலுக்கு பயன்படுத்தப்படும் முக்கிய எண்ணெய்களின் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளன. குறிப்பாக சூரிய காந்தி எண்ணெய்யின் (Sunflower Oil) சில்லரை விற்பனை விலை வெகுவாக அதிகரித்து உள்ளதாக நுகர்வோர் விவகாரங்கள்துறையின் விலை கண்காணிப்புப் பிரிவுத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்தியா, ஆண்டொன்றுக்கு சுமார் 2.5 மில்லியன் மெட்ரிக் டன் சூரியகாந்தி எண்ணெய்யைப் பயன்படுத்துகிறது. இந்தியாவில், பனை (8-8.5 mt), சோயா பீன் (4.5 mt) மற்றும் கடுகு (3 mt) ஆகியவற்றிற்குப் பிறகு நான்காவதாக அதிகம் நுகரப்படும் சமையல் எண்ணெய்யாக சூரியகாந்தி உள்ளது.

இதில், 50 ஆயிரம் டன் சூரிய காந்தி எண்ணெய்யை சொந்த நாட்டில் உற்பத்தி செய்யும் இந்தியா, மீதமுள்ளவற்றில் பெரும்பகுதியை உக்ரைன் மற்றும் ரஷ்யாவிலிருந்தே இறக்குமதி செய்கிறது.

வர்த்தக அமைச்சகத் தரவுகளின் படி, சூரியகாந்தி எண்ணெய் இறக்குமதி 2019-20 நிதியாண்டில் 2.5 மில்லியன் டன்னாகவும், 2020-21 நிதியாண்டில் 2.2 மில்லியன் டன்னாகவும் இருந்தது. இந்த மொத்த இறக்குமதியில், உக்ரைனிடமிருந்து மட்டும் 2019-20 நிதியாண்டில் 1.47 பில்லியன் டாலர் மதிப்பிலான 1.93 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும், 2020-21 இல் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிலான 1.74 மில்லியன் டன் சூரிய காந்தி எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்பட்டது.

அதுபோலவே ரஷ்யாவிடமிருந்து, 2019-20 நிதியாண்டில், 287 மில்லியன் டாலர் மதிப்பில் 0.38 மில்லியன் டன் சூரிய காந்தி எண்ணெய்யும், 2020-21 நிதியாண்டில் 235.89 மில்லியன் டாலர் மதிப்பில், 0.28 மில்லியன் டன் சூரியகாந்தி எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்பட் டது. ஆனால், தற்போது ரஷ்யா - உக் ரைன் இடையிலான மோதல் காரணமாக, இறக்குமதி செய்வதில் தடை ஏற்பட்டு, சூரியகாந்தி எண்ணெய்க்கு பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது.

இது சந்தையில் விலை உயர்வை ஏற்படுத்தியுள்ளது. போருக்கு முன்பு வரை சூரியகாந்தி எண்ணெய் 1 லிட்டர் ரூ.140-க்கு விற்கப்பட்டது. போர் தொடங்கிய பின்னர் இந்த விலை படிப்படியாக அதிகரித்து, ஒரு லிட்டர் பாக்கெட் ரூ. 165 முதல் 178 வரை உயர்ந்துள்ளது. இதுவே சில்லரை விற்பனையில் ஒரு லிட்டர் ரூ.196 வரை விற்கப்படுகிறது. இதே போல பாமாயில் விலையும் அதிகரித்துள்ளது. ரூ. 125-க்கு விற்கப்பட்ட பாமாயில் ரூ.170 ஆக உயர்ந்துள்ளது. எண்ணெய் விலை மட்டுமல்லாது, கோதுமை விலையும் அதிகரித்துள்ளது. 50 கிலோ மூட்டைக்கு ரூ, 100 உயர்ந்துள்ளது.

Also Read: இல்லாத நிறுவனத்திற்கு வங்கியில் ரூ.1 கோடி கடன் வாங்கிய கும்பல்: விசாரணையில் வெளிவந்த உண்மை!