India

‘டீச்சர் அடிக்கிறாங்க’.. 3ம் வகுப்பு மாணவனின் புகார் மீது போலிஸ் எடுத்த நடவடிக்கை என்ன தெரியுமா?

தெலங்கானா மாநிலம் மகபூப்பா நகர் மாவட்டத்திற்குட்பட்ட பையாரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் அனில் என்ற மாணவன் மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், மாணவன் அனில் அப்பகுதியில் உள்ள காவல்நிலையத்திற்கு முகக்கவசம் அணிந்தவாறு தனியாக வந்துள்ளார். அப்போது காவல்நிலையத்திலிருந்த போலிஸார் மாணவனை அழைத்து இங்கு வந்ததற்கான காரணம் குறித்து கேட்டனர்.

இதற்கு அனில், "எனது பள்ளியில் இருக்கும் இரண்டு ஆசிரியர்கள் என்னை அடிக்கடி அடிப்பதாக" கூறியுள்ளார். இதைக்கேட்ட ஆச்சரியடைந்த போலிஸார், துணிச்சலுடன் காவல்நிலையம் வந்த மாணவனை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு சென்றனர்.

அங்கு மாணவன் அனில், தன்னை அடித்த ஆசிரியர்கள் சன்னி, வெங்கட் ஆகிய இரண்டு பேரையும் போலிஸாரிடம் அடையாளம் காட்டினார். இதையடுத்து போலிஸார் ஆசிரியர்களிடம் மாணவர்களை அடித்துத் துன்புறுத்தக் கூடாது என அறிவுரை வழங்கினர். துணிச்சலுடன் காவல்நிலையம் வந்து ஆசிரியர்கள் மீது புகார் அளித்த மாணவனின் இந்த செயல் அனைவரையும் ஆச்சரியப்படவைத்துள்ளது.

Also Read: ஒரேயொரு மிஸ்டு காலில் உறவை வளர்த்து பணம் பறிப்பு: அந்தரங்க படங்களை காட்டி மிரட்டியவர் சிக்கியது எப்படி?